இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆதிக்க கொள்கைகொண்ட பா.ஜ.க, தமிழ்நாட்டில் காலூன்ற இயலாததற்கு, தமிழ் மக்களின் சமூகநீதி கொள்கை முக்கிய காரணமாக இருக்கிறது.
அதனால், வட மாநிலங்களில் பா.ஜ.க செயல்படுத்தும் உத்திகள் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்து, முருகரை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க.
பா.ஜ.க.வின் இந்த அரசியல் முன்னெடுப்பை தமிழ்நாட்டின் பலரும் விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் தந்திர அரசியலுக்கு ஆதரவு கொடி பறக்கவிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “திருப்பரங்குன்றத்தில் கலவரத்தைத் தூண்ட நினைத்து தோற்று ஓடிய பா.ஜ.க இப்போது மீண்டும் ஒரு முயற்சியாய் மதுரையில் முருகன் மாநாடு என்ற பெயரில் ஒரு கலவர மாநாட்டை நடத்துகிறது. அதற்கு எடப்பாடி வாழ்த்துச் சொல்லியிருப்பது அசிங்கம்.
திராவிடத்தை அழிப்போம் என ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதோடு எடப்பாடி வாழ்த்துவதும், தி.மு.க அரசியல் அமைப்பு சட்டதில் போராடிப் பெற்ற இணைப்பு மொழியான ஆங்கிலத்தைப் படிக்காதீர்கள் என அமித்ஷா சொல்வதை தாய்மொழி வளர்ச்சிக்குத்தான் எனச் சொல்வதும், அ.தி.மு.க - பா.ஜ.கவின் தொங்கு சதை அல்ல, அதோடு இரண்டறக் கலந்து சாக்கடையாகிவிட்டது என்பதை உணர்த்தியிருக்கிறது.
மிஸ்டர் எடப்பாடி அவர்களே தயவு செய்து பேரறிஞர் அண்ணாவையும் திராவிடத்தையும் கொச்சைப் படுத்தாதீர்கள்!
பேரறிஞர் அண்ணாவின் படத்தையும் கட்சியில் உள்ள திராவிடம் என்கிற பெயரினையும் எடுத்துவிடுங்கள்!” என கண்டனம் தெரிவித்துள்ளார்.