அரசியல்

ANI-ல் நீக்கப்பட்ட செய்தி! : பா.ஜ.க.வினரின் வெறுப்பை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுகிறதா?

ஆங்கிலத்திற்கு எதிராக அமித்ஷா பேசிய காணொளியும், அது சார்ந்த செய்தியும், ANI ஊடகத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பேச்சு, எதிர்ப்பை சந்தித்த சில நிமிடங்களில் இது நடந்துள்ளது.

ANI-ல் நீக்கப்பட்ட செய்தி! : பா.ஜ.க.வினரின் வெறுப்பை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுகிறதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினர் இந்திய மொழிகளை வளர்ப்பதைக் காட்டிலும், இந்தியை வளர்ப்பதையும், சமஸ்கிருதத்தை திணிப்பதையும்தான் முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.

அதனை உறுதி செய்யும் வகையில்தான், ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வரும் சட்டத்திருத்தங்களும், கல்வி கொள்கைகளும் அமைந்துள்ளன. அரசு சார்ந்த திணிப்பு ஒருபுறம் நடக்க, ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுகளில் இடம்பெறும் திணிப்புகள் மறுபுறம் தலைதூக்கி வருகின்றன.

குறிப்பாக, 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 126.12 கோடி. அதில் 1 விழுக்காடு என்று எடுத்துக்கொண்டால் கூட 1.26 லட்சம் பேர். ஆனால் அதிலும் பாதி கூட இல்லாத அளவில், அதாவது வெறும் 24,821 மக்களே தாய்மொழியாக கொண்ட ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை), ஒட்டுமொத்த நாட்டின் ஆதிக்க மொழியாக்க மாற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு பாடுபட்டு வருகிறது.

அதற்காக, டெல்லி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பாடம், சமஸ்கிருத வளர்ச்சிக்கு 10 ஆண்டுகளில் ரூ.2,346 கோடி நிதி, பள்ளி கல்வியில் சமஸ்கிருத படிப்பு உள்ளிட்ட எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதான், பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம் என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில், “சமஸ்கிருதம்தான் இந்தியாவின் பல மொழிகளுக்கு மூல மொழி” என்றும் பேசியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்த நேரடி திணிப்பு நடவடிக்கைகள், மொழி வல்லுநர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கண்டிக்கப்படும் சூழல் நிலவுவதால், தற்போது வேறு வழியில் அவர்களுக்கு சிக்கலாக இருக்கும் ஆங்கில மொழியை துரத்தி அடிக்கப் பார்க்கிறார்கள்.

அந்த வகையில், இன்று (ஜூன் 19) நடந்த முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அஷுதோசின் புத்தக வெளியீட்டு விழாவில், “இந்திய நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிவரும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்தியாவில் பல தரப்பட்ட மொழிகள் பேசப்படுவதால், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கமும் இருந்திடக்கூடாது என்பதற்காக, ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கிறது. ஆகவே, அது சமஸ்கிருத - இந்தி திணிப்பிற்கு எதிராக இருக்கிறது. அதனால், ஆங்கிலத்தை புறக்கணித்தால், இந்தி தலைதூக்கும் என்பதுதான், அமித்ஷா பேச்சின் பின்னணியாகவும் கருதப்படுகிறது.

இதுபோன்ற திணிப்பு - வெறுப்பு பேச்சுகளை மக்களிடையே கொண்டு செல்லும் கருவியாகதான் ஊடகம் விளங்கி வருகிறது. ஜனநாயகத்தின் 4ஆவது தூண் எனப்படும் இந்த ஊடகத்தின் சுதந்திரத்தை, தனது ஆதிக்க அதிகாரத்தால், முடக்கும் நடவடிக்கையாகதான், அமித்ஷாவின் வெறுப்பு பேச்சை சுட்டிக்காட்டிய ANI செய்தியின் நீக்கம்.

ஆங்கிலத்திற்கு எதிராக அமித்ஷா பேசிய காணொளியும், அது சார்ந்த செய்தியும், ANI ஊடகத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவின் பேச்சு, எதிர்ப்பை சந்தித்த சில நிமிடங்களில் இது நடந்துள்ளது.

எனவே, இதனை சுட்டிக்காட்டி தனது X சமூக வலைதளத்தில் ஊடகவியலாளர் முகமது சுபைர், “நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்ன? அழைப்பு வந்ததா?” என விமர்சித்துள்ளார்.

சுபைர் எழுப்பிய கேள்வி, இந்திய மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் தற்போது எழத்தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories