சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையத்திற்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் நீட் தேர்வில் தோல்வியடைந்த மதுரையைச் சேர்ந்த மாணவிக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறிநார். மேலும் கடந்தாண்டு 12 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது என்று தெரிவித்த அவர், நம் மாணவர்களின் எதிர்கால கல்விக்கு என்னவெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ எதைப் படிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற விளக்கத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.
மேலும் இந்தாண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 1,35,715 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 76,181 பேர், 59,534 பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிவித்தார். முதற்கட்டமாக 80 மனநல ஆலோசகர்கள் இரண்டு ஷிப்டுகளாக ஆலோசனை வழங்குகிறார்கள் என்றும், காலையில் இருந்து 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்தமாக உள்ள 75 அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் படிக்கும் வாய்ப்பு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 76,181 பேரில் 11,850 பேருக்கு தான் உள்ளது என்று கூறிய அவர் மாணவர்கள் தனிமையில் இருக்கக் கூடாது, மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடாது, தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது மதுரையைச் சேர்ந்த ஒரு மாணவியரிடம் பேசினேன், அவர் சுமை எதுவும் இல்லை என்றார், நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு ஒரு சுமை தான், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.