தமிழர்களின் தொன்மையை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து கழக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி அறிவிப்பு.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.
அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.