உலகின் மூத்த குடி, ‘தமிழர் குடி’ என்ற வரலாற்று சிறப்புமிக்க உண்மையை, உலகளவில் பல்வேறு அறிக்கைகள் வழி அறிஞர் பெருமக்கள் உறுதி செய்தாலும், ஆரியக் கண்ணோட்டம் உடையவர்களால் அது ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மையாகவே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகவே, அறிவியல் சார்ந்த தமிழரின் வரலாற்றுச் சிறப்பை உலகிற்கு மேலும் ஒரு முறை உணர்த்தும், கீழடி அகழாய்வை, மறைக்கவும் மாற்றவும் திட்டமிட்டு வருகிறது ஆரியக் கண்ணோட்டம் கொண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு.
குறிப்பாக, கீழடியால் தமிழரின் பெருமை மேலோங்கும் என்பதை உணர்ந்து, கீழடி ஆராய்ச்சியை இடைநிறுத்தியதோடு மட்டுமல்லாமல், கீழடி ஆராய்ச்சி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது ஒன்றிய அரசு.
இது குறித்து, தமிழ்நாடு வந்த ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று கூசாமல் பதிலளித்திருக்கிறார்.
இந்நிலையில், கீழடி ஆய்வு குறித்த் விரிவான கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையை சுட்டிக்காட்டி, தனது X சமூக வலைதளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, “கீழடியில் நிலவிய தமிழர் தம் தொன்மை நாகரிகம் பொது யுகத்திற்கு முன்பு ஆறு நூற்றாண்டுகள் பழமையானது (6th Century BCE) என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் இன்றைய செய்தி கட்டுரை ஆய்வறிஞர்களின் கருத்துக்களோடு ஆதாரபூர்வமாக நிறுவுகின்றது.
ஆதாரங்கள் போதவில்லை என்று கேட்ட பலருக்கும், அறிவியல் வழி நின்று பதில் சொல்லியிருக்கிறது தமிழர் வரலாறு.
வலுவான தொல்லியல் ஆய்வுகளின் மூலம் தமிழ் நிலத்தின் தொன்மையை, சிறப்புமிகு வரலாற்றை உலகிற்குப் பறைசாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்த ஆண்டு அகழ்வாய்வுப் பணிக்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 7 கோடியாக உயர்த்தியுள்ளது முதலமைச்சரின் உறுதிப்பாட்டிற்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என பதிவிட்டுள்ளார்.