இந்தியா முழுவதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு, அனைவரும் சமம் என்ற உணர்வுடன் வாழ பல்வேறு உரிமை போராட்டங்கள் அரங்கேறி, 2025ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையிலும், பிறப்பின் அடிப்படையிலான பிரிவினையை வளர்க்கும் கல்வியை கற்பிக்க முன்வந்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க அரசு.
இதற்கு தவிர்க்க முடியாத எடுத்துக்காட்டுகளாக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளர்களின் புத்தகங்களை பாடமாக்குவது, கல்லூரி பேராசிரியர்களை வலுக்கட்டாயமாக ஆர்.எஸ்.எஸ்-ல் இணைய வற்புறுத்துவது போன்ற செயல்பாடுகள் அமைந்துள்ளன.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளர்களை முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், கல்வித்துறையில் உயர் அதிகாரிகளாகவும், ஆட்சிப் பணி அதிகாரகளாகவும் இடம்பெற செய்யும் பா.ஜ.க, அனைத்து துறைகளிலும் பிரிவினையையும், ஏற்றத்தாழ்வுகளையும் அதிகரிக்க வித்திட்டு வருகிறது.
இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளை விதைக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சமஸ்கிருத (தர்மஷாஸ்திரா) பிரிவும் அமைந்துள்ளது.
ஆரியக் கண்ணோட்டம் கொண்ட ஒரே காரணத்திற்காக, ஆளுமையும் மொழித் திறனும் இல்லாத சமஸ்கிருத மொழியை, ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழித்து, மக்களிடையே திணிக்கும் நடைமுறையில், ஒன்றாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றாலும், இம்முறை வெறும் மொழித்திணிப்பு மட்டுமல்லாமல், வர்ணாசிரம கொள்கை திணிப்பாகவும் அமைந்துள்ளது, மாணவர்களிடமும், மக்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மஷாஸ்திரா என பெயரிடப்பட்ட பாடப்பிரிவில் மநுநீதி (பிறப்பின் அடிப்படையிலான பிரிவினை), சாதிய கட்டமைப்புகள், திருமணம் என்ற முறை வழி மக்களை வேறுபிரிப்பது என்பதான கல்வி கற்பிக்க இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவினையை வளர்க்கிறது என்பதால்தான் மநுநீதியை 1927ஆம் ஆண்டே எரித்து, ஆரிய கண்ணோட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய அண்ணல் அம்பேத்கர்.
ஆனால், அவர் வகுத்த முறையில் ஆட்சியைப் பிடித்து, தற்போது இந்தியாவின் அடிப்படை கோட்பாட்டையே மாற்ற திட்டம் தீட்டி வருகிறது பா.ஜ.க. இந்த நடவடிக்கையை மட்டுமல்லாது, பிரிவினை சிந்தனையையே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருந்தே துரத்தி எறியும் காலம் நெருங்கிவிட்டது என்பதையே அண்மை கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
சமூக நீதியை நிறுவ, எங்கிலிருந்து எதிலிருந்து மக்கள் மீண்டெழுந்து கல்வி கற்கும் உரிமை பெற்றிருக்கிறார்களோ, அத்தகைய கல்விக்கூடங்களிலேயே ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய மனநிலையை திணிக்க முற்பட்டிருக்கும் பா.ஜ.க.வின் செயல், தேசிய அளவில் கண்டனம் பெற்று வருகின்றன.