சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அதன் விவரம் :
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை, நியமன பதவிகளில் வருகின்ற ஆளுநர்கள் இனி எந்நாளும் பறிக்க முடியாது எனும் மகத்தான தீர்ப்பை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத்தந்த, நம்முடைய மாநில சுயாட்சி நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய குடும்ப வாரிசாக மட்டுமின்றி, அவருடைய கொள்கை வாரிசாகவும் திகழுகின்ற திரு.பிரகாஷ் அம்பேத்கர் அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகின்றேன்.
I feel proud to share the dais with you Thiru.Prakash Ambedkar. Sir, you are not the family member of Dr.B.R.Ambedkar, but also, the ideological successor of Babasaheb Dr.Ambedkar. I warmly welcome you to Tamil Nadu, the land of Periyar and India’s Social Justice headquarters.
தந்தை பெரியாருடைய பிறந்த நாளைசமூக நீதி நாள்என்றும், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை, சமத்துவ நாள் என்றும், கொண்டாடுகின்ற இந்தியாவிலேயே ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும்தான். தலைவர்களை கொண்டாடுகின்ற அதே வேளையில், அவர்களின் கொள்கைகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கும் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை மனதில் வைத்து தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அயராது உழைத்து வருவதுடன், திட்டங்களை தீட்டி வருகின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து, அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்திற்குச் சென்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.ராஜா அவர்கள்.ஒடுக்கப்பட்ட மக்களைஆதி திராவிடர்என்று அழைக்க வேண்டும்என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவரும் அவர்தான். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திரு.எம்.சி.ராஜா அவர்களுடைய பெயரில், இன்றைக்கு நவீன கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத் திறப்பு விழா நடந்திருக்கின்றது.
சுமார் 228 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள், கல்லூரி விடுதிகள், சமூக நலக்கூட கட்டடங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கின்றார்கள். பழங்குடியினர் ஆயிரம் பேருக்கு குடியிருப்புகளையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, 50 ஆயிரம் பட்டியல் இன, பழங்குடியின பயனாளிகளுக்கு 301 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை,நம் முதலமைச்சர் அவர்கள் வழங்க இருக்கிறார்கள்.
சமூகத்தில், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை நாம் கைதூக்கி விட வேண்டும். இது தான் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான திராவிட மாடல் அரசின் லட்சியம். இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது 9.69 சதவீதமாக இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வந்துள்ளது. எல்லாருக்கும் எல்லாம் என எல்லாரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்கின்ற கழக அரசின் திட்டங்கள் தான் இந்த வளர்ச்சிக்கு ஒரே காரணம்.
ஆதிதிராவிடர் - பழங்குடியின மக்களை கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் முன்னேற்ற வேண்டும், சமூக அடக்குமுறையில் இருந்து அவர்களை நாம் காப்பாற்ற வேண்டும். வன்கொடுமைகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கான உறுதியான நடவடிக்கைகளை நம்முடைய அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கை அரியலூர் அனிதா நீட் தேர்வினால் 2017-இல் உயிரிழந்தது நம் அனைவருக்கும் தெரியும். நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி. எனவே தான், நீட்டுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை, நம்முடைய அரசு தொடர்ந்து நடத்தி வருகின்றது. அன்றைக்கு மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய, தங்கை அனிதாவுக்கு அனுமதி இல்லை. ஆனால், இன்றைக்கு அனிதா பிறந்த அரியலூரில் மருத்துவக்கல்லூரி அரங்கத்திற்கு, அவருடைய பெயரை சூட்டி அழகு பார்த்தது நம்முடைய திராவிட மாடல் அரசு. நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இதற்கு பெயர் தான், சமூகநீதி. இந்த உணர்வு நம்முடைய உள்ளங்களில் இருக்கின்ற வரை, தமிழ்நாட்டை யாராலும் பிரித்தாள முடியாது. ஆனாலும், நம்மை பிரித்தாளுகின்ற முயற்சிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த சூழ்ச்சிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை முறியடிக்க வேண்டும். அதற்கு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கருடைய பார்வை நம் அனைவருக்கும் வேண்டும். அதற்காகத் தான், அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளை இன்றைக்கு சமத்துவ நாளாக கொண்டாடுகின்றோம்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரினைச் சூட்டி அழகு பார்த்தார்கள். அண்ணல் அம்பேத்கருக்கு சென்னையில் மணி மண்டபம் கட்டியதும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். இன்றைக்கு கலைஞர் அவர்கள் வழியில், அண்ணல் அம்பேத்கருடைய லட்சியங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவர் தான் நம்முடைய முதலமைச்சர்அவர்கள். பட்டியலின – பழங்குடியின மக்கள் சமூக ரீதியாக விடுதலை பெற வேண்டும். அதுமட்டுமல்ல, பொருளாதார விடுதலையையும் அவர்கள் அடைய வேண்டும். அதற்காகத் தான் "அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். பட்டியல் இன, பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது நம்முடைய அரசு. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இன்றைக்கு நடத்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி. ஆகவே, அண்ணல் அம்பேத்கர் அவர்கள், எந்த லட்சியத்திற்காக உழைத்தார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கு நாம் அனைவரும் ஓரணியில் நின்று உறுதியுடன் பயணிப்போம். நலத்திட்டங்களை பெற வந்துள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய புகழ் ஓங்கட்டும்! இன்று மட்டுமல்ல,, எல்லா நாளுமே சமத்துவ நாளாக அமையட்டும் என்று கூறி வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்!