தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் சிக்கலைப் போக்க பல்வேறு கடிதங்களும், கோரிக்கைகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் முன்வைக்கப்பட்டாலும், மீனவர் வஞ்சிப்பு தொடர்ந்து வருவதற்கு, பொருளாதார தீர்வு காணும் திட்டங்களை, தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ், அறிவிப்புகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.360 கோடியில் மீன்பிடித் துறைமுகங்கள், ரூ.216.73 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.
அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.
எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.