மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருக்கோவில் மற்றும் தர்கா தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை இன்றைய தினம் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில் "தற்போது திருப்பரங்குன்றம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. அவரவர்கள் அவரவர் மத வழிபாடுகளை செய்து வருகின்றனர். எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு அமைதியான சூழலை விரும்புகிறது. திருப்பரங்குன்றம் மலை பகுதியில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனுவில் " திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள அருள்மிகு 18-ம் படி கருப்பசாமி திருக்கோவில், அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில் மற்றும் பிற கோவில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது.
ஒற்றுமையே பலம் என்பதால் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்" என தெரிவிக்கப்பட்டது.
அதோடு "இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஒன்றிய அரசின் தொல்லியல் துறை , "திருப்பரங்குன்றம் மலை தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.மற்ற விஷயங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் " என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொல்லியல் துறையின் பதிலை ஏற்க மறுத்த நீதிமன்ற நீதிபதிகள், " திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது"என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, "தொல்லியல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்