ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த 5-3-2025 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த 7.3.2025 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று (மார்ச் 22) சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் சிங், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஆந்திரா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட 14 அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில் இடம்பெற்ற பெயர்பலகையில், ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய் மொழிகளில் பெயர்கள் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்புக்கு பலரும் வரவேற்பு அளித்தனர்.
அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முன்னெடுப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
பாஜக ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உரிமைகளை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.03.2025 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டறிந்தார். அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் முன் மொழிந்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தொகுதிகள் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமைய வேண்டும் என்ற முறையில் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து இன்று 22.03.2025 நடத்தியுள்ள கூட்டம் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மாநிலங்களின் உரிமைகளை நிலை நாட்டுவதுடன், குடியரசு அமைப்பின் அச்சாக விளங்கும் கூட்டாட்சி நெறிமுறைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பதை எதிர்கால வரலாறு உறுதி செய்யும்.
வரும் முன் உரைப்பது அமைச்சு என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, நாடு எதிர் கொள்ளும் பேராபத்தை முன் உணர்ந்து, அதனை தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்ட கேரளம், தெலுங்கானா, பஞ்சாப் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.