தென்மாநிலங்களில் தங்களது செல்வாக்கை அதிகரிக்க முடியாததால், அம்மாநிலங்களில் நிதி ஒதுக்கீடு என பல்வேறு வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு ஏற்படும் ஆபத்தையும் முதன் முதலில் வெளிப்படுத்தினார்.
அதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, தொகுதி மறுசீரமைப்பிற்கு ஒன்றிணைந்து குரல் எழுப்ப செய்துள்ளார். இதோடு மட்டும் நிற்காமல், அனைத்து மாநிலங்கள் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றையும் உருவாக்கினார்.
இந்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் 6 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் உள்ளிட்ட 14 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக தென்மாநிலங்கள் உறுதியுடன் இருப்பதை இந்த கூட்டு நடவடிக்கைக்கழு கூட்டம் காட்டுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டிய முதல் கூட்டத்திலேயே தென் மாநில முதலமைச்சர்கள் மட்டுமல்லாது பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் பங்கேற்று தனது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் பாதுகாப்பதில் தமிழ்நாட்டோடு நின்று விடாமல் இந்திய அளவில், அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்ணைப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்பதற்கு இந்த கூட்டம் ஒரு சான்று. இதை வரலாறு சொல்லும்.