மாநிலங்களவையில் இன்று நேரமில்லாநேரத்தில் பேசிய தி.மு.க MP இரா.கிரிராஜன, தமிழ்நாட்டில் மறுவரை என்ற பேரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க கூடாது என வலியுறுத்தினார்.
அப்போது பேசிய இரா.கிரிராஜன் MP,இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 84வது அரசியல் சட்ட திருத்தம் மூலம் 2026ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வரை மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி வரையறை செய்யக்கூடாது என தெளிவாக திருத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2002ஆம் ஆண்டின் தொகுதி மறுவரையறை சட்டமும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 2026ஆம் ஆண்டு வரை மாற்றி அமைக்கக் கூடாது என வலியுறுத்துவதாகவும் அவரது உரையில் கூறியுள்ளார்.
இதன்மூலம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களுக்கு இடையே மக்கள்தொகையை சமன் செய்வதற்காக தொகுதிகள் 2001ஆம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது என்பதும், மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை ஆகியவை 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிலிருந்து மாறாமல் உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்குப் பிறகே மாற்றப்பட வேண்டும் என்பது தெரியவருவதாக திமுக எம்.பி. கிரிராஜன் தனது உரையில் தெளிவுபடுத்தி உள்ளார்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்திய தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து, நாடாளுமன்ற தொகுதிகளை பறித்து குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தாமல், அதிக பிறப்பு விகிதத்தின் காரணமாக மக்கள் தொகை விகிதத்தை அதிக அளவில் கொண்ட உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்த அணுகுமுறை அடிப்படை நியாயமற்றதாகவும், மக்கள்தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, சம வளர்ச்சி ஆகியவற்றில், நாட்டின் வளர்ச்சிக்கான தமிழ்நாட்டின் தொடர் முயற்சிகளை புறக்கணிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்தின் கூட்டாட்சி தத்துவத்தை அச்சுறுத்தும் இப்படிப்பட்ட தொகுதி மறுவரையறை என்கிற கவலைக்குரிய விஷயத்தை அவையின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும், இந்த நடைமுறை என்பது தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களை விகிதாசார ரீதியாக தண்டிப்பதாகவும், மூன்று தசாப்தங்களாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த தவறியவர்களுக்கு வெகுமதி அளித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழ்நாட்டிற்கு தண்டனை அளிப்பதாக இருக்கிறது என கிரிராஜன் எம்.பி பேசினார்.
தொகுதி மறுவரையறை செய்வதற்கு 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வற்புறுத்தி வருவதே தமிழ்நாட்டின் ஒன்றிணைந்த எதிர்ப்பிற்கான சான்றாக உள்ளதாகவும் கிரிராஜன் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல் முற்றிலுமாக நசுக்கப்படும் அதனால் தற்போது கூறப்படும் தொகுதி மறுவரையறை திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும், தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகள் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது மிகவும் அவசியம் எனவும் திமுக எம்.பி. கிரிராஜன் தனது உரையில் ஒன்றிய அரசை நேரமில்லா நேரத்தில் வலியுறுத்தி பேசினார்.