தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தென்மேற்கு மாவட்ட கழக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம் நநடைபெற்றது. இதில் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர்ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தென்னகத்திலிருந்து ஒரு முதுகெலும்புள்ள தைரியமான முதலமைச்சர் வந்துள்ளார். ஒன்றிய அரசு மிரட்டினால் பயப்பட நாங்கள் ஒன்றும் அதிமுக அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி. பாசிசத்தின் மிரட்டலுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இந்தியை அனுமதித்தால் சூழ்நிலை வேறு மாதிரி மாறி, வட மாநிலங்கள் போன்ற நிலை இங்கு வந்துவிடும். புதிய கல்விக் கொள்கை மூலம் குறுக்கு வழியில் இந்தி திணிப்பை புகுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்கிறது. எப்படியாவது இந்தியை நம் மீது திணித்து, நம் உரிமைகளை சீர்குலைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஒன்றிய அரசிடம் நம்முடைய நிதி உரிமை தான் நாங்கள் கேட்கிறோம் கூடுதலான நிதியை நாங்கள் கேட்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மறு வரையறை போன்றவற்றை புகுத்த ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. 543 தொகுதிகள் இந்தியாவில் இருக்கின்றது. இதில் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 31 தொகுதியாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
ஒன்றிய அரசு திட்டமிட்டு இதனை செய்து வருகிறது. 850 இருக்கைகளோடு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அமித்ஷா கூறுகிறார். தெலங்கானா வந்த பிரதமர் மோடி மறுவரை செய்தால் தென்னிந்தியாவிற்கு 100 தொகுதிகள் குறையும் என்று கூறினார். இதில் எது உண்மை ? அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். அதனைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது,
வட மாநிலத்திற்கு தொகுதிகள் உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டிற்கும் உயர்த்தப்பட வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்காக வருகின்ற ஐந்தாம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.ஒரு படத்தில் வடிவேலு பொண்ணு பார்க்க சொல்லுவார், சல்லென்று சல்லென்று பொண்ணு ஓடிவிடும், எங்கம்மா பெண்ணையே காணும் மின்னல் போல ஓடிவதென்று கூறுவார், அதுபோலத்தான் சட்டமன்றத்தில் ஆளுநரை நாங்கள் பார்த்தது கிடையாது. சட்டமன்றத்திற்கு சல்லென வருவார், சல்லென போய்விடுவார்" என்று கூறினார்.