டெல்லி சட்டப்பேரவையை சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியுள்ள பா.ஜ.க, அதன் வழக்கமான வஞ்சிப்பு, அடக்குமுறை நடவடிக்கைகளை, டெல்லியிலும் கட்டவிழ்க்க தொடங்கியுள்ளது.
மதத்தின் பெயரிலான பாகுபாடு ஒருபுறம், எதிரி கருத்தினரை கூண்டுக்குள் அடைக்கும் அடக்குமுறை நடவடிக்கை மறுபுறம் என பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகள் டெல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
குறிப்பாக, பா.ஜ.க.வின் முதன்முறை சட்டப்பேரவை உறுப்பினரான ரேகா குப்தாவை டெல்லி முதல்வராக அறிவித்ததற்கான காரணமும், காலத்தின் அடிப்படையில் விடையாக வெளிப்பட்டு வருகிறது.
அதற்கு உதாரணங்களாக, கல்லூரி காலம் முதல் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைப் பின்பற்றி செயல்பட்டு வரும் ரேகா குப்தா, டெல்லி முதல்வராக கடந்த பிப்.20ஆம் நாள் பதவியேற்றது முதல் எழுப்பி வரும் சர்ச்சைக்குரிய மிரட்டல்கள் அமைந்துள்ளன.
அவ்வாறு அவர் விடுத்த சர்ச்சை மிரட்டல்களாக, சுமார் 300 ஆண்டுகள் முகலாயர்கள் ஆட்சி செய்த டெல்லி பகுதியில் அமைந்துள்ள சாலைகளுக்கு இஸ்லாமிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, “இச்சாலைகளின் பெயர்களை மாற்றி விடலாமா?” என்பதும்; “மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வேண்டுமா?” என்பதுமான சமூக வலைதளப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற நேரடி மிரட்டல்கள் ரேகா குப்தா பதவியேறிய 6 நாட்களில் அரங்கேறியுள்ளதுதான், டெல்லி மட்டுமல்லாது தேசிய அளவிலான மக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, டெல்லியிலும் சிறுபான்மையினர் நசுக்கப்பட இருப்பதற்கான முன்னுரைதான் இதுவா? என்ற கேள்வியையும் ரேகா குப்தாவின் மிரட்டல்கள் தூண்டியுள்ளது.