இந்திய கூட்டாட்சியில் தேசிய மொழி என்று ஒரு மொழி குறிப்பிடப்படாத நிலையில், இந்தியை தேசிய மொழியாக்கத் திட்டமிடுவது இந்தி பேசாத, இந்தி மொழி தேவைப்படாத பெருவாரியான மாநில மக்களுக்கு கடும் நெருக்கடியை அளித்து வருகிறது.
தேசிய அளவிலான பொதுத்தேர்வுகளிலும், வங்கிகளிலும் விருப்ப மொழியாகக் கூட மாநில மொழிகள் இடம்பெற இயலாத சூழலில், இந்தியின் ஆதிக்கத்தை இந்தி பேசாத மாநிலங்களில் கூடுதலாக திணிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதற்கு எடுத்துக்காட்டுகளாக, ஒன்றிய திட்டங்களுக்கு இந்தியில் பெயர்கள் சூட்டி, அப்பெயர்களை பயன்படுத்த தவறினால் நிதியில்லை; கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தியை கற்றுத்தந்தே தீர வேண்டும் என்ற நோக்கில் மும்மொழிக் கொள்கைக்கு வித்திட புதிய கல்விக் கொள்கையை பிறப்பித்து, அதனை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதியில்லை என்பதான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் இடமான நீதித்துறையில் கூட குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் மாற்றம் செய்து, இந்தி பேசாத பெரும்பான்மை மாநில மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
இது போன்ற நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வலுக்கத் தொடர்வதை எதிர்த்து குரல் எழுப்பிய முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருக்கிறது. மும்மொழி கொள்கைக்கும், இந்தி திணிப்பிற்கும் பெரும் தடையாகவும், தனித்துவமிக்க வரலாறு கொண்ட மாநிலமாகவும் திகழும் தமிழ்நாட்டில் மொழி திணிப்பிற்கு இடமில்லை என்பதை தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசுன் மீண்டும் ஒருமுறை உரக்க எழுப்பியிருக்கிறது.
குறிப்பாக, ஒரு மொழியை திணித்து பிற மொழிகளை அழிக்கும் பாதைக்கு சென்றிருக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்தி திணிப்பிற்கு எதிரான அறப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழ தொடங்கியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொடர்வண்டி நிலையப் பெயர் பலகையில், ‘கடையநல்லூர்’ என இந்தியில் எழுதப்பட்டிருப்பதையும் மையிட்டு அழித்துள்ளனர் தி.மு.க.வினர்.
இவ்வாறான சூழலுக்கு அடுத்தும் இந்தியை திணிப்பதை கைவிடாமல் ஒன்றிய அரசு விடாப்பிடியாக செயல்பட்டால், தமிழ்நாட்டில் இந்தி அழிப்பு நடவடிக்கைகள் தொடரும் என மக்கள் தங்களின் நடவடிக்கைகளையே பதில் மொழியாக வெளிக்காட்டி வருகின்றனர்.