நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக தொடர்ந்து பல காணொளிகளை வெளியிட்டு பேசி வந்தவர் நடிகை விஜயலஷ்மி. 2011ம் ஆண்டில் சீமான் மீது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்தது. எனினும் 2012ம் ஆண்டில் இரு தரப்பும் சமாதானமாகி விட்டதாகக் கூறி தன் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் நடிகை விஜயலஷ்மி.
மீண்டும் 2023ம் ஆண்டில் நடிகை விஜயலஷ்மி, சீமான் மீது புகார் அளித்தார். அதன்பேரில் 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 8ம் தேதி காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார் சீமான். புகாரை விஜயலஷ்மி திரும்பப் பெற்றுக் கொண்டதாக சீமான் தரப்பு கூறியது.
இந்நிலையில் தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, சீமான் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
விஜயலஷ்மி தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவில், சீமான் விஜயலஷ்மியை கட்டாய வல்லுறவு செய்ததாகவும் மதுரைக்கு சீமான் செல்லும்போதெல்லாம் தன்னுடன் விஜயலஷ்மியை தங்க வைப்பார் என்றும் சென்னைக்கு விஜயலஷ்மி வரும்போது சீமான் அவரை சந்திப்பதை தவிர்ப்பார் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் விஜயலஷ்மியை மணம் முடித்துக் கொள்வதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னானது என விஜயலஷ்மியின் குடும்பத்தினர் சீமானிடம் கேட்க சென்றபோது, அவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கின்றனர்.
மனு மீதான இரு தரப்பு விசாரணைக்கும் பிறகு உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம்:
அடிப்படையில் விஜயலஷ்மிக்கு சீமான் மீது காதல் இல்லை. குடும்பத்திலும் சினிமாவிலும் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆலோசனை கேட்க சீமானை சந்தித்திருக்கிறார் விஜயலஷ்மி. அச்சமயத்தில் தன்னை மணந்து கொண்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடுமென சொல்லி இருக்கிறார் சீமான். கட்டாய வல்லுறவுக்கு அவரை உள்ளாக்கி இருக்கிறார் சீமான். ஆனால் அதற்குப் பிறகு அவரை சீமான் மணம் முடிக்கவில்லை. எனவே விஜயலஷ்மி புகார் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டாம் முறையாக 2023ம் ஆண்டில் விஜயலஷ்மி புகார் செய்த பிறகுதான், காவல்துறை விசாரணையை துவக்கியிருக்கிறது. 15 சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்களை காவல்துறை பதிவு செய்திருக்கிறது. விஜயலஷ்மியை மணம் முடித்துக் கொள்வதாக மீண்டும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார் சீமான். மேலும் 6, 7 முறை விஜயலஷ்மியை கருக்கலைப்பு செய்ய வைத்திருக்கிறார் சீமான். மட்டுமின்றி பெரும் அளவுக்கு பணத்தையும் விஜயலஷ்மியிடமிருந்து பெற்றிருக்கிறார்.
சீமான் தரப்பு, விஜயலஷ்மியை மிரட்டியதால்தான் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இரண்டாம் முறை அவர் கடிதம் கொடுத்திருக்கிறார். அதையும் அவர் காவல்துறையிடம் கொடுக்கவில்லை, தன்னுடைய வழக்கறிஞரிடம்தான் கொடுத்திருக்கிறார். அச்சமயத்தில் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்.
கட்டாய வல்லுறவு என்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றம். எனவே பாதிக்கப்பட்ட விஜயலஷ்மி, தன் புகாரை திரும்பப் பெற்றாலும் இந்த வழக்கு விசாரணையை கைவிட்டுவிட முடியாது. ஆகவே ஏமாற்று, மோசடி, பெண்ணுக்கு எதிரான அத்துமீறல், கட்டாய வல்லுறவு, அச்சுறுத்தல் ஆகிய குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் சீமானின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்ய முடியாது. இன்னும் 12 வாரங்களில் காவல்துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.