ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து வருகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருமொழி கொள்கையையே பின்பற்றி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் கல்வி துறைக்கு வழங்கவேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்று கூறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை மூலம் ஒன்றிய அரசு தன்னுடைய அரசியல்,கொள்கைகளை தமிழக மாணவர்கள் மீது திணிக்க முயற்சி செய்கிறது என்று திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "தமிழ்நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், தமிழக மக்கள் குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தான் குழப்பத்தில் இருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளை கண்களை மூடிக் கொண்டு தமிழ்நாடு அரசு ஏற்றுகொள்ளாது என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு, மும்மொழி கொள்கைகளுக்கு எதிர்ப்பு வரிசையில் தற்போது தேசிய கல்வி கொள்கையையும் பின்வாசல் வாயிலாக ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கிறது
கல்வியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ள நிலையில், தேசிய கல்வி கொள்கைகளை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு மிரட்டி வருவதை ஏற்க முடியாது. மற்ற மொழிகளை கற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசு தடையாக இல்லை. மாணவர்களுக்கு சிறந்த கல்வியை தமிழ்நாடு அரசு எப்போதும் வழங்கும். அதை டெல்லியில் உட்கார்ந்து கொண்டு யாரும் தீர்மானிக்க வேண்டாம்.அதை தான் அரசியல் சாசனமும் மாநிலங்களுக்கு உரிமையாக வழங்கி இருக்கிறது.
மும்மொழிக் கொள்கை போன்ற பகுத்தறிவற்ற கொள்கைகளை மக்கள் மேல் திணிக்க கூடாது. மாநிலங்களில் இருந்து மக்கள் கொடுக்கும் வரி பணத்தை தான் ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கு வழங்குகிறது. தமிழ் நாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலத்திற்கு மாற்றி விடுவதை திரும்ப பெற வேண்டும். மீண்டும் அந்த நிதியை தமிழ்நாட்டு மாணவர்கள் நலனுக்காக ஒதுக்க உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக எல்லா வித போராட்டங்கள் நடத்தி நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.