முரசொலி தலையங்கம் (12-02-2025)
டெல்லியைக் கைப்பற்றி என்ன பயன்?
அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்காக டெல்லி மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து அதனை 'டம்மி' மாநிலமாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போது அந்த 'டம்மி' மாநிலத்தைக் கைப்பற்றிவிட்டதாக மகிழ்ச்சி அடைகிறது. 'டம்மி' மாநிலத்தில் ஆட்சியை அமைப்பதால் என்ன பயன்?
11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை அகற்றி இருக்கிறது பா.ஜ.க. டெல்லி தேர்தலில் கடைசியாக 1993 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது பா.ஜ.க. 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. வெற்றியைப் பெற்றுள்ளது. 'டெல்லியை பேரழிவில் இருந்து விடுவித்து விட்டதாக' பிரதமர் மோடி அறிக்கை கொடுத்துள்ளார். டெல்லி என்ற மாநிலத்தின் அதிகாரத்தை அழித்ததே பா.ஜ.க. அரசுதானே?
டெல்லி மாநிலத்தின் அதிகாரத்தையே பறிக்கும் சட்டத்தை 2023 மே மாதம் 19 ஆம் தேதி அன்று நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேசிய தலைநகர் டெல்லி அரசின் சட்டத்தை (1991) திருத்தும் வகையில் இதனைக் கொண்டு வந்தார்கள். குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு அதிகாரம் உண்டு' என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்புக்கு சவால்விடும் விதமாக,டெல்லி யூனியன் பிரதேச அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில்,தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தைத் (The Government of National Capital Territory of Delhi Act - 1991) திருத்தி, தேசிய தலைநகர் குடிமைப் பணி ஆணையத்தை (National Capital Civil Service Authority) உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தார்கள்.
*இதன் மூலம் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் ஆகியவற்றை அந்த மாநில அரசு செய்ய முடியாது. 'தேசிய சிவில் சேவை ஆணையம்' என்ற அமைப்புதான் செய்ய முடியும்.இந்தக் குழுவில் மாநில அரசுடன் இணைந்து ஒன்றிய அரசு அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்கள் முடிவெடுத்து துணை நிலை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இதனை ஏற்பதும் மறுப்பதும் ஆளுநரின் விருப்பம் ஆகும்.
•தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டசபையை ஆளுநர் கூட்டலாம். பேரவை நடக்கும் நாட்களை அதிகரிக்கலாம். குறைக்கலாம்.
•அரசின் நிர்வாகத்தில் குறைபாடு இருந்தால் அதனை அமைச்சருக்குச் சொல்லாமல், நேரடியாக ஆளுநருக்கு அதிகாரிகள் கொண்டு போகலாம்.
•அதிகாரிகள், வாரியங்கள், ஆணையங்கள், சட்டபூர்வ அமைப்புகள் அமைக்கும் அனைத்து அதிகாரமும் ஆளுநருக்கே உண்டு.
- இதுதான் அந்தச் சட்டம். மொத்தமாகச் சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, அமைச்சரவைக்கோ எந்த அதிகாரமும் இல்லை. டம்மியாக உட்கார்ந்து இருப்பார்கள். அப்படித்தான் உட்கார வைக்கப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். புதிதாக வரப்போகும் பா.ஜ.க. முதலமைச்சரும் அப்படிதான் டம்மியாக உட்கார வைக்கப்படுவார்.
ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது, அரவிந்த் கெஜ்ரிவால் அசைக்கமுடியாதவராக இருக்கிறார், 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகித்து அந்தக்கூட்டணியை பலப்படுத்தி வருகிறார் என்பதற்காகவே டெல்லி மாநில அரசை டம்மி ஆக்க இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
டெல்லி சட்டமன்றத்தின் ஜனநாயக நடைமுறையில் துணைநிலை ஆளுநர் தொடர்ச்சியாகத் தலையிடுவது, டெல்லி வரவு- செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்வதைத் தடுப்பது, அன்றாட நிருவாகச் செயல்பாட்டை முடக்குவது ஆகிய செயல்களை அம்மாநில துணை நிலை ஆளுநர் தொடர்ந்து செய்து வந்தார்.
அதற்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை முடிந்தவரை மிரட்டினார்கள். அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு பேரம் பேசினார்கள். இதனை அரவிந்த் கெஜ்ரிவாலே வெளிப்படையாக பேட்டி கொடுத்தார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்," ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினால் டெல்லி முதலமைச்சர் ஆக்குவதாக மணிஷ் சிசோடியாவிடம் பா.ஜ.க. பேரம் பேசியது. அவர் மறுத்துவிட்டார். அந்தக் கட்சியினர் இப்போது என்னை நாடினார்கள். குஜராத் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாமல் விலகிக் கொண்டால் நாங்கள் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவரையும் விட்டு விடுகிறோம். அவர்கள் மீதான எல்லா வழக்குகளையும் கைவிட்டு விடுகிறோம் என்று பேரம் பேசினார்கள். என் நண்பர் வழியாக வந்து இந்தப் பேரத்தை நடத்தினார்கள்" என்று சொன்னார்.
அதாவது ஒரே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடமும் பேரம் பேசுவது, அவருக்கு எதிராக அவர் அருகில் இருப்பவரிடமும் பேரம் பேசுவது. இரண்டிலும் தோல்வி அடைந்த நிலையில் டெல்லி மாநிலத்தின் அதிகாரத்தையே சீர்குலைத்தார்கள். 'முதலமைச்சராக இருந்து கொள், ஆனால் அது வெறும் டம்மி பதவி ' என்று ஆக்கினார்கள்.
"அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிய அரசு தலையிட்டால் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு?" என்று கேட்டது உச்ச நீதிமன்றம். ( 2023 ஜனவரி 13) இப்போது நாம் பா.ஜ.க.விடம் கேட்பதும் இதுதான்.. "எந்த அதிகாரமும் இல்லாத டெல்லி மாநில ஆட்சியைக் கைப்பற்றி என்ன செய்யப் போகிறீர்கள்?"