ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி கல்வி நிதியை, தமிழ்நாட்டிற்கு தராமல் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இதற்கு, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான ஒன்றிய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய மறுத்து தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்மொழி கொள்கை, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பொதுத்தேர்வு போன்ற மாணவர்களின் வஞ்சிப்பு நடவடிக்கைகளை, மாணவர்கள் மீதான திணிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற தமிழ்நாடு அரசின் மறுப்பு தான், நிதி ஒதுக்காததற்கு காரணமாக அமைந்துள்ளது என்கிறது ஒன்றிய அரசு.
இந்தியாவின் பிற மாநிலங்களை விட பல வகையில் குறிப்பாக கல்வியில் சிறந்து விளங்கும், அதிக பட்டதாரிகளை உருவாக்கும் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த வஞ்சிப்பு கடும் கண்டனத்திற்குரியதாய் மாறியுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “அரசியல் பழிவாங்கும் நோக்கில் கல்வியில் இரக்கமற்ற முறையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க அரசு போன்ற மற்றொரு அரசை இதுவரை இந்திய வரலாறு கண்டதில்லை. தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்களின் மீதும் பா.ஜ.க கொண்டிருக்கிற வெறுப்பை இது வெளிக்காட்டியுள்ளது.
மும்மொழி கொள்கை உள்ளிட்ட வரையறைகளை உடைய தேசியக் கல்விக் கொள்கையை திணிப்பதற்கு இடம்கொடுக்காமல், மாணவர்களின் உரிமைகளை மீட்க குரல் எழுப்பியதற்காக, மாணவர்களுக்கு தண்டனை வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.