சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், நந்தனம் அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்தும் “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சுருள்பாசி சாகுபடி கருத்தரங்கம்” மற்றும் பயிற்சி முகாமை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் கோவி. செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் கோவி.செழியன், “விவசாயிகள் நலன்காக்க இலவச மின்சாரம், உழவர் சந்தை என திட்டங்களை கொண்டுவந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். ஒன்றிய அரசு இரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் போட்டது போல, தமிழ்நாடு அரசு விவசாயத் துறைக்கு தனியாக பட்ஜெட் போட்டது.
தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு, மாணவர்களின் திறன்களை வளர்க்க உந்துதல் அளிக்கப்படுகின்றன.
சட்ட பாதுகாப்பு அளித்த அம்பேத்கர், சமூக புரட்சி கொண்டுவந்த பெரியார், சமூக புரட்சியை சட்டமாக்கிய கலைஞர் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு தான் தாழ்த்தப்பட்ட மக்களை படிக்க வைத்தது. இதற்கு திராவிட இயக்கமே பொறுப்பு.
கற்றலும், கற்பித்தவர்களும் பிராமணர்களின் தொழில் என்று கூறினார்கள். அவர்கள், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற சொன்னார்களோ, அந்த சமூகத்தைச் சார்ந்த கோவி.செழியன் உயர்கல்வித் துறையின் அமைச்சராக உள்ளேன். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை” என்றார்.