ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் அருகில் மண் அல்ல பெரியார், ஈரோட்டு மன்னர் தந்தை பெரியார் என்ற தலைப்பில் தந்தை பெரியாரால் ஈரோடு அடைந்த பயன்கள் என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி கொண்டிருந்தனர்.
அதில் தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பு ஈரோடு நகருக்கு கொடுத்த குடிநீர் தொட்டி, சிக்கைய நாயக்கர் கல்லூரி திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி, நகர மன்ற தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட விபரங்கள் அந்த துண்டறிக்கையில் இடம் பெற்று இருந்தன
அதன் அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் துண்டறிக்கை விநியோகித்து வந்தனர். ஒரே இடத்தில் இரு தரப்பினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி சாலையின் எதிர்ப்புறம் தனியாக அழைத்துச் சென்றனர்.
இதனிடையே அவர்களை துரத்திச் சென்ற நாம் தமிழர் கட்சியினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று இரு தரப்பையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.