ஆண்டுதோறும் ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், நடப்பாண்டு 2025-2026-க்கான ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜன.3) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று (பிப்.01) தனது 8-வது ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த பட்ஜெட்டில் பாஜக கூட்டணி கட்சி ஆளும், இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் காணும் பீஹார் மாநிலத்துக்கு விவசாயம் முதல் விமான நிலையம் வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள டெல்லிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் இந்த பட்ஜெட் மக்களுக்கு இல்லாமல், தனது அரசியல் லாபத்திற்காக மட்டுமே ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விம்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளதாக தமிழ்நாடு சிபிஐ கட்சி விமர்சித்துள்ளது.
இதுகுறித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை மாத வருவாய் பிரிவினர் மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பை ரூபாய் 12 லட்சமாக உயர்த்தியுள்ளது.
ஆனால், நிச்சயமற்ற வருமான பிரிவில் உள்ள சுமார் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதை தடுத்து, மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை நிதிநிலை அறிக்கை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளவில்லை.
26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமாக உதவி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கை மௌனமாக கடந்து செல்கிறது. சென்ற ஆண்டு ஆந்திரா மற்றும் பிகார் மாநிலங்களுக்கு வாரி வழங்கியது போல், இந்த ஆண்டு பிகாருக்கு கூடுதல் நிதியும் திட்டங்களும் வழங்கியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின் மயமாக்கல் போன்ற தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறு வாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
காப்பீட்டு துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீடு செய்ய அனுமதிப்பது சாதாரண மக்கள் சேமிப்பை பாதிக்கும். விவசாயிகள் வலியுறுத்தி வரும், சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை வழங்க நிதி நிலை அறிக்கை முன்வரவில்லை. தொழிலாளர் நலன் குறித்தும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மீதும் நிதிநிலை அறிக்கை அக்கறை காட்டவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். வழக்கம் போல பன்னாட்டு குழும நிறுவனங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிதி நிலை அறிக்கை, அடித்தட்டு மக்களையும், உழைக்கும் மக்களையும் வஞ்சித்துள்ளது.
“எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.” என வள்ளுவர் வழங்கிய அறிவுரையை நிதியமைச்சர் கற்றுக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.