
உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா திருவிழா நடப்பாண்டில், கோடிக்கணக்கான மக்கள் திரளுடன் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் வருகையை அறிந்தும் பா.ஜ.க அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கிய பிரமுகர்களை காட்சிப்படுத்துவதையே முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது, கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் வழி அம்பலமாகியுள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை மற்றும் இதர அரசியல் தலைவர்கள் வருகை என அவர்களுக்கு வசதி செய்யும் நோக்கில், கோடிக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டதும், பா.ஜ.க.வின் பாதுகாப்பு மேலாண்மை தோல்வியை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “உத்தரப் பிரதேச கும்பமேளா விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. முக்கிய பிரமுகர்களுக்கு முதன்மை அளிக்கிறோம் என்ற பெயரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியுள்ளது பா.ஜ.க அரசு. இனியும் இதுபோன்ற அசாம்பிவதங்கள் நடக்காதவாறு உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை” என தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கும்பமேளாவில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரைகுறை ஏற்பாடுகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு தனி முக்கியத்துவம் அளித்ததே காரணம். நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தியதாலேயே இந்த துன்பவியல் சம்பவம் ஏற்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.








