அரசியல்

தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம் !

ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று நினைக்கிறார்

தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (29-01-2025)

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர் !

“தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று ஆளுநர் நினைக்கிறார். அது தான் உண்மை.

தமிழ்நாட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு --‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம்' நினைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர். எவ்வளவு கெட்ட எண்ணமும் குறுமதியும் கொண்டவராக ரவி இருக்கிறார் என்றால், குடியரசு தினத்தன்று அவர் விடுத்த அறிக்கையே போதும். அவரது இழி எண்ணத்தின் மொத்த படப்பிடிப்பாக அந்த அறிக்கை அமைந்துள்ளது.

“முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் ரவி. இதற்கு என்ன ஆதாரம்? இப்படி வாய்க்கு வந்ததை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பேசலாமா? முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது, வந்தாலும் போய்விட வேண்டும் என்ற துஷ்ட மனம் கொண்டவராக ரவி இருக்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு 393 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பானது ரூ.10.07 லட்சம் கோடி ஆகும். இதன் மூலமாக 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவை அனைத்தும் ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்லும் தகவல்கள் அல்ல. இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன. யாரும் சும்மா வந்து ஒப்பந்தம் போட மாட்டார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம் !

*தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது. இது ஆளுநர் ரவிக்குத் தெரியாதா? பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic advisory council report to pm report - EAC- PM) அறிக்- கையை எடுத்துப் பார்க்கவும். இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது அந்த அறிக்கையில் இருக்கிறது. சொல்வது பிரதமரின் ஆலோசகர்? ஆளுநருக்கு அவரது அரைகுறை ஆலோசகர்கள் இதைச் சொல்வது இல்லையா?

*தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்துவிட்டதை அவர் அறிய மாட்டாரா?

*பொருளாதார, சமூகக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது என்பதை ஒன்றிய அரசின் அறிக்கைகளே சொல்கிறதே. அதை ஆளுநர் வாங்கிப் பார்க்கலாம்.

*மக்களைத் தேடி' மருத்துவம் திட்டம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருதைப் பெற்ற செய்தியை ஆளுநர் அறியவில்லையா?

*தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 விழுக்காட்டை விட மிகமிகக் குறைவு என்பதை தன்னைச் சுற்றி இருக்கும் (துக்ளக் ரசிகர்களை விலக்கிவிட்டு!) அதிகாரிகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாமே ஆளுநர்!

*இந்திய நாட்டின் மொத்தப் பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சமூகத்தின் சரி பாதியான பெண்களின் சமூக பங்களிப்பானது பாதிக்குப் பாதி என்ற சூழலை எட்டும் அமைதிமிகு மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவர் விரும்பவில்லையா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிய வேண்டும் என்று நினைக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம் !

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum- WEF2025) ஆண்டுதோறும் மாநாடு ஒன்று நடக்கும். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தி.மு.க.அரசு அமைந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளாகத்தான் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள்- - வல்லுநர் குழுவும் பங்கேற்று வருகிறார்கள். இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான ஒரு தகவலைச் சொல்லி இருக்கிறார்கள்.

“இந்த ஆண்டு கலந்து கொண்ட போது, டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் இந்தியா பெவிலியனைத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மராட்டிய மாநில முதலமைச்சர் மற்றும் சில மாநிலங்களின் அமைச்சர்களுடன் இணைந்து அந்த நிகழ்வில் பங்கேற்றேன். தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் உருவாகியுள்ள தொழில்வளர்ச்சியையும், தொழிற்கட்டமைப்புகளையும், புதிய முதலீடு களுக்கான சூழலையும் விளக்கி, ஏற்கனவே தொழில்துறையில் வளர்ந்துள்ள மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஆற்றி வரும் முக்கியப் பங்கினைக் குறிப்பிட்டேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் தொழில் துறை அமைச்சர். தமிழ்நாட்டின் முன்னேற்றமானது சுவிஸ் வரைக்கும் பரவி இருக்கிறது. ஆனால் கிண்டியில் இருந்து கொண்டு ஒருவர், இன்னமும் பொய்யைக் கிண்டிக் கொண்டிருக்கிறார்.‘பூனை கண்ணை மூடிக் கொண்டதால் உலகம் இருண்டு விடாது' என்பதைத்தான் ஆளுநருக்குப் பதிலாகச் சொல்ல முடியும்.

banner

Related Stories

Related Stories