அரசியல்

“மக்களின் உணர்வுக்கும், அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்தது!” : டங்ஸ்டன் ரத்து குறித்து முதலமைச்சர்!

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது.

“மக்களின் உணர்வுக்கும், அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்தது!” : டங்ஸ்டன் ரத்து குறித்து முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு, கடந்த ஆண்டு நவம்பர் 7 அன்று ஒன்றிய அரசு வழங்கியது.

இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் பெருவாரியான பங்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவித்ததற்கும் ஆணி வேராய் அமைந்த ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனமே உரிமை கொண்டுள்ளது, கூடுதல் சர்ச்சையாக அமைந்தது.

இதுபோன்ற ஒரு பின்னணி கொண்ட ஒரு நிறுவனத்தை கொண்டு மேலும் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் வஞ்சிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய பா.ஜ.க எடுத்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசிற்கு அனுப்பப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் ஒன்றிய அமைச்சகத்திற்கு கடிதமும் எழுதினார். நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்தனர்.

“மக்களின் உணர்வுக்கும், அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்தது!” : டங்ஸ்டன் ரத்து குறித்து முதலமைச்சர்!

சாலைகளில் நின்று, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தங்களது கடுமையான எதிர்ப்பை மக்கள் போராட்டங்களாக வெளிப்படுத்தினர். இந்நிலையில், தமிழரின் தொன்மைக்கு வலு சேர்க்கப்பட்ட இந்நாளில் (ஜனவரி 23 - உலக அளவில் இரும்பு பயன்படுத்திய முதல் இனம், தமிழினம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு) மக்கள் மற்றும் மக்களின் நிகராளிகளின் தொடர் போராட்டத்திற்கும், அழுத்தத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முதலமைச்சர் சொன்னதை செய்திருக்கிறார் என்று மக்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

இது குறித்து தனது X வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!

சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது!” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories