தமிழ்நாட்டின் சமூகநீதி திராவிட மாடல் ஆட்சி, ஒன்றியத்தில் மதத்தின் சார்பிலான ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.விற்கு எதிர்வினையாக இருப்பதால், தமிழ்நாடு அரசின் மீது தொடர் பொய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அதன் தொடர்ச்சியாக தற்போது, திராவிட மாடல் ஆட்சியை தலைமை தாங்கியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார் ஆர்.என்.ரவி.
இதனை கண்டித்து சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தன்னுடைய எக்ஸ் பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது முதலமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு பதிவிட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, தேசிய கீதமே பாட முடியாது என்று சொன்னதாக புரளி கிளப்புகிறார். நாளை வருகிற இன்னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா?
மேலும், இதனால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித்தான் என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே. ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை, திராவிடத் தத்துவம் காலவாதியாகிவிட்டது’ என்று ஒரு நாளிதழுக்கு கொடுத்த பேட்டியை முதன்மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது.
ஆளுநராக நியமிக்கப்பட்டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
எனவே, ஆளுநர் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளர்.
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும், “தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டு கூட்டத் தொடர் கடந்த 06.01.2025 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
கூட்டத் தொடரை தொடக்கி வைத்து உரையாற்ற வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது அரசியலமைப்பு கடமையை செய்யாமல், பேரவையை விட்டு வெளியேறி, அநாகரிகமாக நடந்து கொண்டார்.
ஆளுநர் உரையாற்றத் துவங்கும் முன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடுவதும், உரை நிறைவடைந்ததும் நாட்டுப் பண் பாடுவதும் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் மரபாகும். வழிவழியாக அமைந்துள்ள இந்த மரபை உடைத்து, தமிழ் தாய் வாழ்த்து பாடும் முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் அடாவடியாக வலியுறுத்தி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதை நாடு முழுவதும் காண நேர்ந்தது.
இருப்பினும், ஆளுநர் உரையை, பேரவைத் தலைவர் அவைக்கு வாசித்தளித்தார். இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் உரையாற்றி, தீர்மானம் நிறைவேற்றி, அவையின் மரபையும், மாண்பையும் பாதுகாத்துள்ளது. உறுப்பினர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர், வழங்கிய பதிலுரை ஆளுநர் நடந்து கொண்டதை குறிப்பிடும் போது “பகைவனுக்கும் அருளும்” உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை “முதலமைச்சர், அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர், மதிக்காதவர், ஆணவம் கொண்டவர் என மனம் போன போக்கில் அவதூறு மூட்டைகளை அவிழ்த்து கொட்டி, இழிவு படுத்தி சுய மகிழ்வு கண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகையில் அநாகரிக அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.