தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! முதலில் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் ‘பராசக்தி’ படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார்; ‘இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’. அதேபோல், இந்தச் சட்டமன்றமும் ஆளுநரைப் பொறுத்தவரை, சில ஆண்டு காலமாக விசித்திரமான காட்சிகளைத்தான் கண்டு வருகிறது. மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்ற வருகிறார், ஆனால், உரையாற்றாமல் சென்றுவிடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ள அடிப்படையில், ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதி மீறல் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கின்றார்.
2021 ஆம் ஆண்டு இப்போதிருக்கும் ஆளுநர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு இதே ஆளுநர் தன்னுடைய முதல் உரையை முழுமையாக வாசித்தார், எதையும் மாற்றவில்லை. ஆனால், இந்த மூன்றாண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களையெல்லாம் சொல்லிப் படிப்பதைத் தவிர்த்தார் என்று இந்த அவையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்! பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும், அவை நடவடிக்கைகள் முடியும்போது நாட்டுப்பண் ஒலிப்பதும்தான் காலங்காலமாகப் பின்பற்றப்க்கூடிய மரபு. இந்த விளக்கத்தைச் சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுக்கிறார்; தவிர்க்கிறார்! தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் நான் சாதாரணமானவனாக இருக்கலாம்; ஆனால், இந்தச் சட்டமன்றம் நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றம்; கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் உருவான சட்டமன்றம்! இந்தச் சட்டமன்றத்தின் மாண்பையும் மதிக்காமல், மக்களது எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தையே அவமானப்படுத்தத் துணிந்ததன் மூலமாக, தான் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும் இழுக்கு ஏற்படுத்தும் காரியத்தை அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது; இனியும் காணக்கூடாதது!
அவர் அரசியல்ரீதியாக எங்களை புறக்கணிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், திராவிட இயக்கம் என்பதே புறக்கணிப்புகள், அவமானங்கள், ஒடுக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக உதயமானதுதான்! இந்த இயக்கத்தின்மேல் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைகளையும் மீறித்தான் நூற்றாண்டு கண்டிருக்கிறோம். ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறை ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் உண்டு. நிச்சயமாகச் சொல்கிறேன்... ஏழாவது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் அமையப் போகிறது. அதற்கு அடித்தளமான இந்த ஆறாவது முறை ஆட்சி அமைந்தபோது, "இது விடியல் ஆட்சியாக அமையும்" என்று சொன்னோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் "விடியல் எங்கே" என்று கேட்கிறார்கள். விடியலை தரப்போவதாக சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. விடியலைப் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!
விடியலின் அடையாளம் எது தெரியுமா? நான் சென்கின்ற இடமெல்லாம் கூடுகின்ற மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்! மாதந்தோறும் ஒரு கோடியே 14 இலட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்களே... அப்போது அவர்கள் முகங்களைப் பாருங்கள்... அதில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியல் ஆட்சி! "தாய் வீட்டுச் சீர் போன்று எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திரச் சீர்" என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் மனம் மகிழச் சொல்கிறார்களே... அதுதான் விடியல் ஆட்சி! ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோட்டைக்குச் சென்று நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்துக்குத்தான்! இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்திருக்கிறது. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை அவர்களுக்கு மிச்சமாகிறது; அதை சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை இது அதிகரித்திருக்கிறது. அந்த பஸ்ஸுக்கு ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள், இதுதான் விடியல் ஆட்சி!
அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம். "எத்தனையோ தொழில்களைத் தொடங்குகின்றீர்கள், அதில் பணியாற்ற திறமைசாலிகளாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள்" என்று சொன்னதை வைத்துத்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கினேன். இந்தத் திட்டத்தில் இதுவரை 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற பல இலட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில் இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது, இதுதான் விடியல் ஆட்சி! அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கின திட்டம்தான் ‘புதுமைப் பெண் திட்டம்’. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது.
இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 இலட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கின்றோம். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார் - "என் குடும்ப வறுமை காரணமாகக் கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா? என்று சந்தேகமாக இருந்தது, பணம் இல்லை, அதனால் வேண்டாமென்று என் அம்மா சொல்லிவிட்டார். புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும் என் அம்மா சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், தினமும் பஸ்ஸில் போகவேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கின்றதே என்று நான் சொன்னேன். ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு இன்று நான் படித்து வருகிறேன்" என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான் விடியலுக்கான சாட்சி! அதனால்தான் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை "அப்பா, அப்பா" என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏனென்றால், இந்தப் பாச உணர்வுதான் முக்கியம்! ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்று ஒரு திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றோம். போதிய சத்து இல்லாமல் பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மூலமாக தீவிர ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது. அதில், தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கின்றார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள 6 மாதத்திற்குட்பட்ட 76 ஆயிரத்து 705 பச்சிளம் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுடைய பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்கப்பட்டன. இதனால்தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்திருக்கின்றார்கள்.
அதில் பயனடைந்த ஒரு தாய் சொன்னார்... "என் குழந்தை பிறக்கும்போது மிக, மிகக் குறைவான எடையோடுதான் பிறந்தது. என்ன செய்யப் போகிறோமென்று நினைத்தேன். அதை வளர்க்கின்ற அளவிற்கு என்னிடம் பண வசதியில்லை. முதலமைச்சரின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தால் நிறைய பொருட்கள் கிடைத்தன. அதன் மூலமாக என் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இப்போது வளர்ந்திருக்கிறது" என்று சொன்னார். அந்தத் தாயின் கனிவான வார்த்தைகளில் விடியல் தெரிகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம். தினந்தோறும் காலையில 17 இலட்சத்து 53 ஆயிரம் மாணவ, மாணவியர் வயிறார காலை உணவு சாப்பிடுகின்றார்கள். அந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது, காலை உணவு சாப்பிட்ட பிள்ளைகள் முகங்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இந்தத் திட்டத்தைப் பற்றி மதுரை மாணவி ஹரிணி சொல்லியிருந்ததை நான் வீடியோவில் பார்த்தேன்... "நான் தினமும் காலையில் சாப்பிடமாட்டேன், ஆட்டோ வந்ததும் ஓடி வந்து ஏறிவிடுவேன், சாப்பிடாமல் வந்ததாலே ஸ்கூலுக்கு வந்ததும் தண்ணீர் குடித்துக்கொள்வேன். ஆனால், இப்பொழுது கிச்சடி, பொங்கல் கொடுப்பதனால் தெம்பாகப் படிக்கின்றேன்" என்று சொன்னதைக் கேட்டபோது நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்காக மிக, மிக பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன்! இவைதான் விடியலின் சாட்சிகள்! இப்படி நான் சொல்லிக்கெண்டே போகமுடியும்; இப்படி ஒவ்வொரு திட்டத்தையும் சொல்லத் தொடங்கினால் எதிர்க்கட்சியினர் அதிகமான வேதனையடைவார்கள் என்பதால் சிலவற்றைச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாக பலனடையும் வகையிலான திட்டங்களைத் தீட்டும் ஆட்சிதான் உதயசூரியனின் ஆட்சி. இந்த ஆட்சி உருவானபோது இதை திராவிட மாடல் ஆட்சி என்று நான் சொன்னேன். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது போன்று, திராவிடம் என்ற சொல்லைப் பார்த்துச் சிலர் பயப்படுகின்றார்கள்! திராவிட மாடல் என்றால் சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இரத்தபேதமில்லை, பால்பேதமில்லை, விளிம்புநிலை மக்கள் நலன், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் பங்கு, மதச்சார்பின்மை, தொழில் வளர்ச்சி, தொழிலாளர் முன்னேற்றம், கூட்டாட்சிக் கருத்தியல், அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள், தமிழுக்கு உரிய இடம், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சமூகக் குறியீடுகள் அனைத்திலும் முதன்மை; இவைதான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மக்கள் வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்று அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியைச் சொல்கிறோம். இதைத்தான் “எல்லோர்க்கும் எல்லாம்” என்று சொல்கிறோம். திராவிட கருத்தியல் கொள்கையால்தான் தமிழ்நாடு இன்று வளர்ந்த மாநிலமாக இருக்கின்றது.
தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.
தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
வறுமைக் குறியீடுகளில் இந்தியாவின் சராசரி விழுக்காடு என்பது 14.96-ஆக இருக்கும்போது தமிழ்நாட்டின் சராசரி 2.2 விழுக்காடாக இருக்கிறது.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றிருக்கிறது.
இந்திய நாட்டின் மொத்த பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்கள் பெருகியதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.
டெல்லியில் இருக்கின்ற தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின்கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியிருக்கிறது.
இந்தியா முழுவதுக்குமான பணவீக்கம் அதிகமாகியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமான பணவீக்கம் குறைந்திருக்கிறது. இதுதான் ‘திராவிட மாடலின்’ சாதனை! "தொழில்கள் வளர்கின்றன; புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகின்றன, இதனால் தொழிலாளர்களுக்கு என்ன பயன்?" என்று சிலர் கேட்கலாம். புதிய தொழில் நிறுவனங்கள் வருகின்றதென்று சொன்னால், ஏதோ தனியார் முதலாளிகள் மட்டும் வளமடைகிறார்களென்று பொருளில்லை. அந்த நிறுவனங்கள் மூலமாக மாநிலம் வளர்கிறது, கிடைக்கும் வேலைவாய்ப்புகளின் மூலமாக இலட்சக்கணக்கான குடும்பங்களும் வளர்கின்றன, வாழ்கின்றன, இதை மனதில்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 666 தொழிற்சாலைகள் இருக்கின்றன. குஜராத்தில்
31 ஆயிரத்து 31 தொழிற்சாலைகளும், மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து
446 தொழிற்சாலைகளும் இருக்கின்றன. மனித வளத்தை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத்தைவிட தமிழ்நாடு சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில்
39 ஆயிரத்து 699 சிறு, குறு தொழில்கள் இருக்கின்றன. இதன் மூலம் 4 இலட்சத்து
81 ஆயிரத்து 807 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கோவிட் காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்தன, உங்கள் அனைவருக்கும் தெரியும், அதை சீர்படுத்தியிருக்கின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 8 இலட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாட்களுடன் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது.
அடுத்து, போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், "அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்" என்றுதான் என்னை சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான். போராடலாம், தவறில்லை; போராட வேண்டிய இடத்தில் போராடலாம், போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம், தவறில்லை. இத்தகைய போராட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி கேட்டால் நாங்கள் கொடுத்திருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை சுமார் ஒரு இலட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கின்றோம்.
சட்டம்-ஒழுங்கைப் பற்றி சிலர் இங்கே குறிப்பிட்டார்கள். என் தலைமையிலான அரசில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுகின்றது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மேல் தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கொலைகள், ரவுடிகள் சம்பந்தப்பட்ட கொலைச்சம்பவங்கள் மற்றும் ரவுடிகள் தொடர்புடைய சாதிய கொலைச் சம்பவங்கள் குறைந்திருக்கிறது. எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. குற்றம் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது. அதனை மீறியும் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாகக் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றார்கள். எந்தக் குற்றவாளியையும் யாரும் காப்பாற்றுவதுமில்லை. உரிய தண்டனை, கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட்டிருக்கிறது. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதில் யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது. பெரும்பாலான கொலைகள் குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், பணம் கொடுக்கல்-வாங்கல், நிலப்பிரச்சினை, தனிப்பட்ட முன் விரோதம், வாய்த்தகராறு போன்ற காரணங்களுக்காகவே நடந்திருக்கின்றன. அரசியல் காரணங்கள், சாதிய கொலைகள், மதரீதியான கொலைகள், ரவுடி கொலைகள் தி.மு.க. ஆட்சியில் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே பாதுகாப்புமிக்க முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.