அரசியல்

தன்னாட்சி உரிமையை பறிப்பதை வாய்மூடி பார்த்துகொண்டிருக்க மாட்டோம்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!

மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தன்னாட்சி உரிமையை பறிப்பதை வாய்மூடி பார்த்துகொண்டிருக்க மாட்டோம்- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள UGC வரைவு நெறிமுறைகளின் படி, கல்வித்துறை சாராத தொழில் துறை நிபுணர்கள், பொதுத்துறை சார்ந்தவர்கள் போன்றவர்களை பல்கலைக்கழக துணை வேந்தர்களாக நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரத்தை மாநில ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில் UGC விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதே போல துணை வேந்தரை தேடும் குழுவில் மாநில அரசின் பிரதிநிதியை நீக்கிவிட்டு, அதற்கு பதில் ஆளுநரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழக உறுப்பினரே இடம்பெறுவார் என்றும் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

"துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த எதேச்சாதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது.

தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழ்நாடு நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது.

அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்கமுடியாது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு முன்னெடுக்கும்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories