ஒன்றிய பா.ஜ.க அரசின் ஆட்சியில் இந்திய அளவில் முதலாளித்துவ போக்குகள் அதிகரித்து, ஏழை எளிய மக்களின் நிதிநிலை கடும் சரிவைக் கண்டுள்ளது.
அவ்வாறான நிதிநிலை சரிவை சந்தித்த பெருவாரியான மக்களில், இந்திய விவசாயிகளின் பங்கும் தவிர்க்க முடியாததாய் அமைந்துள்ளது. இதனால், குறைந்த ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் பல மாத காலங்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
ஆனால், அதனை சகித்துகொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசு, அவ்வப்போது வன்முறையை தூண்டி விட்டு, விவசாய பெருமக்களுக்கான நீதிப் போராட்டத்தில் அநீதி நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது.
இந்த அநீதி நடவடிக்கைகளில் உயிர் சேதங்கள் அரங்கேறியதும், கசப்பான உண்மையாக இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காத ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து, பஞ்சாப் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு, சுங்கச்சாவடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாய பெருமக்கள்.
இதனால், பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நகர முடியாமல் சாலையிலேயே நிறுத்திவைக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
சாலை வழி போக்குவரத்து தடையிடப்பட்டது மட்டுமல்லாமல், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தொடர்வண்டி தண்டவாளங்களிலும் அமர்ந்து, தொடர்வண்டி போக்குவரத்திற்கும் தடையிட்டுள்ளனர்.