விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
“ஆதவ் அர்ஜூனின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
துணை பொதுச் செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ்அர்ஜுனா. அப்படி ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை.
குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாக கொண்டுள்ளோம். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். ஆதவ் அர்ஜீனா மீதான நடவடிக்கை குறித்த முடிவு விரைவில் வரும்.
விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாட்டளவில் மதசார்பற்ற கூட்டணியிலும், தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை.
திமுக கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு உள்ள சதி திட்டமாக இருக்கிறது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள்.”