மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்து நாடாளுமன்ற மக்களவையில் வங்கிகளுக்கான சீர்த்திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய் அதானி ஊழல் குறித்து பேசினார். அப்போது அதானியின் பெயரை கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக அவையில் இல்லாதவர்களின் பெயரை கூறக் கூடாது என சபாநாயகர் ஒம் பிர்லா கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
பின்னர் சபாநாயகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பேசிய மக்களவை திமுக கொறாடாவும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, "அவையில் உறுப்பினராக இல்லாத இந்திராகாந்தியின், பெயரை பாஜக எம்.பி.க்கள் கூறும் போது சபாநாயகர் அமைதியாக இருந்தது ஏன்" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் "மக்களவையை சபாநாயகர்,பாரபட்மின்றி நடத்திட வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். இதனையடுத்து, சபாநாயகர் ஒம் பிர்லா அரசியல் பேசாமல் அனைத்து உறுப்பினர்களும் மசோதா மீது விதிமுறைகளுக்கு உட்பட்டு பேச வேண்டும் என்று கூறினார்.