அரசியல்

குஜராத் விஷசாராய மரணத்துக்கு மோடி, அமித்ஷா பதவி விலகினார்களா ? - நிர்மலாவுக்கு முரசொலி சரமாரி கேள்வி !

குஜராத் விஷசாராய மரணத்துக்கு மோடி, அமித்ஷா பதவி விலகினார்களா ? - நிர்மலாவுக்கு முரசொலி சரமாரி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (27-06-2024)

நிர்மலா ஏன் மறைக்கிறார் :

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்தில் டெல்லியில் இருந்து மூக்கை நுழைத்திருக்கிறார் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன். “மாநில போலீஸார் விசாரணையில் உண்மைகள் வெளிவராது. சி.பி.ஐ. விசாரணை தேவை” எனப் புலம்பியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். “விஷச் சாராய மரணங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறது” என எந்த ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் அவதூறு குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமனுக்கு மறுபடியும் நிதி அமைச்சர் பதவி தரப்பட்டதைப் பார்த்ததும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அதே பழைய கொடூர ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது என்பதை இந்திய நாடு உணர்ந்து கொண்டது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய கேடுகளுக்கு எல்லாம் நிதித்துறையைக் கையில் வைத்திருந்தவர்தான் காரணம் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை படுகுழியில் அல்ல, பாதாளத்தில் தள்ளுவதற்கு முதலாவது காரணம் நிர்மலா சீதாராமன். இரண்டாவது காரணம், இங்கிருக்கும் ஆளுநர் ரவி என்பதை நன்றியுணர்வோடு' நாம் மறக்கப் போவது இல்லை. திடீரென வானத்தில் இருந்து குதிப்பதைப் போல கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி நிர்மலா ஏன் பேசினார்?

தமிழ்நாடு கேட்ட வெள்ள நிவாரண நிதியை இன்னமும் தரவில்லை அவர். அதனால்தான் அதை மறைக்க இதைப் பேசுகிறார். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லி சென்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்." இரண்டு இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்தது. இதற்கான நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியைக் கேட்டிருந்தோம். ஆனால் ரூ.276 கோடியைத்தான் இதுவரை கொடுத்துள்ளீர்கள். இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்”என்று குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் சொல்ல நிர்மலா சீதாராமனுக்குத் தொண்டை அடைக்கிறது. ஆனால் அவருக்கு அவசியமில்லாத கள்ளக்குறிச்சியைப் பற்றி திசை திருப்புவதற்காகப் பேசுகிறார்.

குஜராத் விஷசாராய மரணத்துக்கு மோடி, அமித்ஷா பதவி விலகினார்களா ? - நிர்மலாவுக்கு முரசொலி சரமாரி கேள்வி !

நிர்மலா சீதாராமன் கண்ணுக்கு இந்தியாவிலேயே கள்ளக்குறிச்சி மட்டும்தான் தெரிகிறதா? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கைகளை அவர் பார்த்திருக்கிறாரா?

•2017--ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,497 கள்ளச்சாராய வழக்குகள் பதிவாகி, 1,510 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாகக் கர்நாடகாவில் 256 பேரும் மத்- தியப் பிரதேசத்தில் 216 பேரும், ஆந்திராவில் 183 பேரும், பஞ்சாபில் 170 பேரும், அரியானாவில் 135 பேரும், புதுச்சேரியில் 117 பேரும் சத்தீஸ்கரில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர்.

•2018--ம் ஆண்டில் 1,365 பேர் கள்ளச் சாராயத்தால் இறந்தனர். இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 410 பேரும், கர்நாடகாவில் 218 பேரும், அரியானாவில் 162 பேரும், பஞ்சாபில் 159 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 78 பேரும், சத்தீஸ்கரில்77 பேரும், ராஜஸ்தானில் 64 பேரும் உயிரிழந்தனர்.

•2019--ம் ஆண்டில் கள்ளச் சாராயத்தால் நாட்டில் 1,296 பேர் இறந்தனர். கர்நாடகாவில் கலப்பட சாராயம் குடித்து அதிகபட்சமாக 268 பேர் உயிரிழந்தனர். பஞ்சாபில் 191 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 190 பேரும், சத்தீஸ்கரில் 115 பேரும், அசாமில் 98 பேரும், ராஜஸ்தானில் 88 பேரும் உயிரிழந்தனர்.

•2020--ம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பரவிய காலத்திலும் கூட கள்ளச் சாராயமரணங்கள் நடந்தன. நாடு முழுவதும் 931 கள்ளச் சாராய வழக்குகள் பதிவாகி 947 பேர் உயிரிழந்தனர். அப்போது அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 214 பேரும், ஜார்கண்டில் 139 பேரும், பஞ்சாபில் 133 பேரும், கர்நாடகாவில் 99 பேரும், சத்தீஸ்கரில் 67 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர்.

•2021--ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 708 சட்டவிரோத போலி மது அருந்திய சம்பவங்கள் நடந்தன. அதில் 782 பேர் இறந்து போனார்கள். இந்த மரணத்தில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 137 பேரும், பஞ்சாபில் 127 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 108 பேரும் கர்நாடகாவில் 104 பேரும் ஜார்கண்டில் 60 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும் இறந்தார்கள். குஜராத் அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் பகுதிகளில் 2009 ஜூலையில் கள்ளச் சாராயத்துக்கு 136 பேர் பலியான போது அங்கே மோடிதான் முதல்வராக ஆட்சி செய்து கொண்டிருந்தார். உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித்ஷா. அவர்கள் இருவரும் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்களா?

குஜராத்தில் 2022--ல் விஷச்சாராயத்துக்கு 42 பேர் பலியான போது நிர்மலா என்ன செய்துகொண்டு இருந்தார்? அதற்கெல்லாம் நிர்மலா சீதாராமன் கருத்துச் சொன்னாரா? அந்த மாநில அரசுகளைக் குற்றம் சொன்னாரா? இல்லை. எதற்காக தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் குறை சொல்கிறார்? பா.ஜ.க. மரண அடியை நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. படுதோல்வி அடைந்த மாநிலங்களில் கூட ஒரு தொகுதியையாவது பா.ஜ.க. பெற்றது. ஆனால் இங்கே ஒரு தொகுதியைக் கூடப் பெற முடியவில்லை. 8 தொகுதிகளில் ஜெயிக்கப் போவதாக மோடியை ஏமாற்றி வைத்திருந்- தது ஒரு கூட்டம். மோடியையே ஏமாற்றினார்கள் என்றால் இந்தக் கூட்டத்தின் மோசடித்தனத்தைச் சொல்ல வேண்டுமா? அவை அனைத்திலும் மண் விழுந்து விட்டது. ஒரு தொகுதியைக் கூட பெற்றுத்தர முடியாத தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு பா.ஜ.க. அமைச்சரவையில் அமைச்சராக உட்காருவதற்கு கூச்- சமே இல்லையா? இதை மறைக்கத்தான் கள்ளக்குறிச்சி கரிசனமெல்லாம்!

banner

Related Stories

Related Stories