அரசியல்

தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!

ஒன்றிய பா.ஜ.க அரசின் முதலாளித்துவ அரசியலால், தனியார்மயமாக்கப்படும் அரசு துறைகள் மற்றும் உடைமைகள்.

தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2024 மக்களவை தேர்தலில், இடஒதுக்கீடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் போல பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடி, கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் எவ்வாறு இடஒதுக்கீட்டிற்கு தடையிட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் இந்தியா கூட்டணி தலைவர்களின் வழி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கடந்த காலங்களில் கல்வியற்றவர்களாய், நிரந்தர வேலையற்றவர்களாய் இருந்ததனை சரிசெய்து, சம உரிமை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

இது 1970-களின் பிற்பகுதியில், மண்டல் கமிஷனால், செயல்முறைப்படுத்தப்பட்டது. அப்போதைய நிலையில், பா.ஜ.க என்கிற கட்சி ஒரு அரசியல் கட்சியாகவே உருவாகவில்லை.

அதன் பின் தான், மதப்பிளவுகளை உண்டாக்கி, கடந்த காலங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் அளிக்காமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் சார்ந்து வாழும் வாழ்வியலை உருவாக்கிய ஆரிய அடக்குமுறை அரசியலைக் கொண்டு வந்து, குறுக குறுக உருவானது பா.ஜ.க.

எனினும், பா.ஜ.க தனது கருத்தியலை நேரடியாக மக்களுக்கு கொண்டு சென்றது வரை, ஒன்றிய ஆட்சிக்கட்டிலில் ஏறாமலே இருந்தது.

எப்போது, வெளியில் ஒன்று, உள்ளில் ஒன்று என்று ஆரிய கருத்தியலை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்ததோ, அப்போது ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

அவ்வாறு பொய் வாக்குறுதிகளாலும், பிரச்சாரங்களாலும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை ஒரு வழியாக்கி விட்டது என்பது யாராலும் மறுக்க இயலாத கூற்றாக உருவெடுத்துள்ளது. அதில் ஒன்று தான், தனியார்மயமாக்கல்.

தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!

தனியார்மயமாக்கல் என்பது, ஒன்றிய அரசின் பொதுச்சொத்துகளை, அதாவது மக்கள் சொத்துகளை, அம்பானி, அதானி போன்ற தனியாருக்கு தாரைவார்ப்பது தான்.

அந்த வகையில், தனியாருக்கு பல பொதுச்சொத்துகளும், துறைசார்ந்த உடைமைகளும், ஒன்றிய பா.ஜ.க.வால் தாரைவார்க்கப்பட்டதால், இது இடஒதுக்கீட்டிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “‘மூங்கில் இல்லை என்றால், புல்லாங்குழல் இசைக்காது’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், அரசு வேலையை ஒழித்துவிட்டால் இடஒதுக்கீடு இருக்காது என்ற நோக்கில் மோடி செயல்படுகிறார்.

கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மூலம் அரசு வேலைகளை இல்லாதொழித்து பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பாஜக அரசு மறைமுகமாகப் பறித்து வருகிறது.

2013ல் பொதுத்துறையில் 14 லட்சம் நிரந்தரப் பணியிடங்கள் இருந்த நிலையில், 2023ல் வெறும் 8.4 லட்சம் மட்டுமே இருக்கிறது. BSNL, SAIL, BHEL உள்ளிட்ட நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், 6 லட்சம் நிரந்தர வேலைகள் அகற்றப்பட்டன. இதில் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என ஒன்றிய பா.ஜ.க அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “SC, ST, OBC இட ஒதுக்கீட்டில் 50% என்ற உச்ச வரம்பை நீக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இந்த உச்ச வரம்பை நீக்குவதையும், அதை அரசியல் சட்டத் திருத்தத்தில் கொண்டுவரவும் எடுக்கும் நடவடிக்கையை மோடி ஆதரிக்கிறாரா அல்லது எதிர்க்கிறாரா? வழக்கம்போல், திசைதிருப்பாமல், திரிக்காமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்!” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத தகவல்களை கூறி, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த மோடி முயற்சிக்கிறார். இட ஒதுக்கீடு வரலாறு தெரியாமல் பிரச்சாரம் செய்கிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படியே SC, ST பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது கூட மோடிக்கு தெரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, “1947 முதல் ஒவ்வொரு கட்டத்திலும் இடஒதுக்கீட்டை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர அரசியல் சட்டத்தை மாற்ற நினைப்பது பாஜகவும் ஆர்எஸ்எஸ்க அமைப்புதான் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள்தொகை அடிப்படையில் SC, ST மற்றும் OBC சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், இவை எவற்றிற்கும் பதிலோ அல்லது மறு மொழியோ தெரிவிக்காமல், தனது பொய் பிரட்டல்களை தடையின்றி, ஆற்றி வருகிறார் மோடி.

அவர் பேசுவது பொய் என்றும், மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு பேச்சு என்றும் அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வரும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதற்கான மேல்முறையீடாக, டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற போது, நீதிமன்றமும், மோடிக்கு சார்பான தீர்ப்பு வழங்கியது, ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது.

எனினும் மோடியின் வெறுப்பு பேச்சுக்கும், பொய்களுக்கும் எதிராக இந்தியா கூட்டணி இடைவிடாது போராடி வருகிறது.

banner

Related Stories

Related Stories