அரசியல்

“ஆதிவாசி போல..” - ஹேமந்த் சோரன் குறித்த சர்ச்சை பேச்சு : பகிரங்க மன்னிப்பு கேட்ட Aaj Tak ஊடகவியலாளர்!

ஹேமந்த் சோரன் குறித்தும் அவரது சமூகம் குறித்தும் தொலைக்காட்சி நேரலையில் விமர்சித்த Aaj Tak ஊடகவியலாளருக்கு எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

“ஆதிவாசி போல..” - ஹேமந்த் சோரன் குறித்த சர்ச்சை பேச்சு : பகிரங்க மன்னிப்பு கேட்ட Aaj Tak ஊடகவியலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஹேமந்த் சோரன் ஊழல், நில மோசடி உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக புகார் எழுந்தது.

இந்தக் குற்றசாட்டுகளை முன்னாள் முதல்வரும் பாஜகவை சேர்ந்தவருமான ரகுபர்தாஸ் வைத்திருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஹேமந்த் சோரன் கடந்த ஜன., 20-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து ஜன., 29-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Hemant Soren
Hemant Soren

இந்த நிகழ்வுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வந்த நிலையில், நில மோசடி தொடர்பாக ஜன., 31-ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை மேற்கொண்டது. சுமார் 7 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், அன்று மாலையே அவரை கைது செய்தது.

ஹேமந்த் சோரன் கைதுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பழங்குடியின தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் கைதுக்கு அக்கட்சியின் தொண்டர்களும் கண்டனங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே அவரது கைது தொடர்பான செய்தி நாடு முழுவதும் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிடமும் விவாத பொருளாக மாறியது. இந்த சூழலில் பாஜக ஆதரவு ஊடகமான ஆஜ் தாக் (Aaj Tak) செய்தி ஊடகத்தின் ஊடகவியலாளர் ஹேமந்த் சோரனை அவரது சமூகம் சார்ந்து தாக்கி பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதாவது Aaj Tak செய்தி ஊடகத்தின் மூத்த ஊடகவியலாளர் சுதிர் சௌத்ரி, தொலைக்காட்சி நேரலையில் ஹேமந்த் சோரன் கைது குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “ஹேமந்த் சோரன் சிறைக்குச் செல்வது ஒரு ஆதிவாசி காட்டிற்குச் செல்வது போல் இருக்கும். ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பழகியுள்ள இவர், 20, 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆதிவாசி காட்டிற்கு செல்வது போல் இருக்கும். இந்த இரவு அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும்” என்றார்.

ஹேமந்த் சோரன் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ஒரு ஊடகவியலாளர் இப்படி பேசலாமா என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், சுதிர் சௌத்ரியை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். மேலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதன் பேரில், FIR பதிவும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுந்து வந்த கண்டனங்களின் எதிரொலியாக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

“ஆதிவாசி போல..” - ஹேமந்த் சோரன் குறித்த சர்ச்சை பேச்சு : பகிரங்க மன்னிப்பு கேட்ட Aaj Tak ஊடகவியலாளர்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பழங்குடியினரை இழிவுபடுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளதைக் கண்டு நான் வேதனைப்படுகிறேன். ஹேமந்த் சோரனை விமர்சிப்பது பழங்குடியினரை விமர்சிப்பதாகவோ, அவமதிப்பதாகவோ பொருள் இல்லை. பழங்குடியினரின் வாக்குகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதில்தான் நான் நடத்திய நிகழ்ச்சி கவனம் செலுத்தியது.

கந்து வட்டிக்காரர்களால் பகிரப்படும் சிறிய வீடியோ கிளிப், தவறான செய்தியைக் கொடுப்பதற்காக எனது கதையின் சூழலை மாற்றுகிறது. நான் எப்போதுமே பழங்குடியினரை ஆதரிக்கிறேன், மதிக்கிறேன். அனைவருக்கும் என்னால் பதிலளிக்க முடியாது, ஆனால் எனது ஆதிவாசி சகோதர சகோதரிகளுக்கு என்னைப் பற்றி விளக்குவது எனது கடமை என்று நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், நிபந்தனையின்றி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories