அரசியல்

அடக்குமுறை சட்டங்கள் விவகாரம் : “பாஜக, RSS வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது” - கி.வீரமணி விமர்சனம் !

முந்தைய அரசியல் எதிரிகளிடம் நாணயமான வெளிப்படைத் தன்மை இருந்தது. ஆனால் இப்போதும், இனியும் நாம் சந்திக்கவிருக்கும் எதிரிகள், அடிப்படை நாணயமற்ற, பச்சை உருமாறிகள் என கி.வீரமணி விமர்சித்துள்ளார்

அடக்குமுறை சட்டங்கள் விவகாரம் : “பாஜக, RSS வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது” - கி.வீரமணி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு, விட்டுக் கொடுத்து ஜனநாயக விரோத, மக்கள் விரோத பிஜேபி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு :

“நமது அறிவு ஆசான் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டும், அவரால் உருவாக்கப்பட்ட, மானமும் அறிவும் பெற்ற மக்கள் இன்றும் உலகெங்கும் அவரது கொள்கை லட்சியப் பயணத்தை மேற்கொண்டு அவர் விட்ட பணி முடிக்க விவேகத்துடனும், வீரத்துடனும், உற்சாகத்துடனும் வினையாற்றுகிறார்கள்!

தந்தை பெரியாரின் மண்ணிலிருந்து இந்தியா முழுவதும் சமூகநீதி கொண்டு செல்லப்பட வேண்டும் :

கடந்த 50 ஆண்டுகளில் உருவான பல சோதனைகளையும், அறைகூவல்களையும் நாம், நமது இயக்கம் மட்டுமல்ல, நமது கொள்கை லட்சியங்கள்படி நம்மோடு பயணிக்கின்ற அரசியல் திராவிடர் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர் கொண்டு, களமாடி கனி பறிப்பதில் வெற்றி கண்டே வருகின்றது!

தமிழ்நாடு சமூகநீதி மண்; பெரியார் மண் என்பதால் அதன் கொள்கை வழிப்பட்ட தனித் தன்மை, இந்தியா முழுவதற்குமே பெரியார் என்ற சமூகநீதி கலங்கரை வெளிச்சம் மூலம் பயணத்தை எளிதாக்குகிறது.

முன்னர் நாம் களமாடியவர்கள் நாணயமான எதிரிகள் :

கடந்த 50 ஆண்டுகளில் பெரும் பகுதியில் நம்மோடு களமாடிய கொள்கை எதிரிகளை நாம் எதிர் கொண்ட முறைக்கும், இப்போதும், இனியும் எதிர்கொள்ள விருக்கும் கொள்கை எதிரிகளுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு. முந்தைய அரசியல் எதிரிகள் “நாணயமான எதிரிகள்” - அவர்களிடம் வெளிப்படைத் தன்மை இருந்தது. ஆனால் இப்போதும், இனியும் நாம் சந்திக்கவிருக்கும் இன்றைய - நாளைய எதிரிகள், அடிப்படை நாணயமற்ற, பச்சை உருமாறிகள் - அசல் சந்தர்ப்பவாத சகலகலா ‘வித்தைக்காரர்கள்’ என்பதை மனதிற் கொண்டு, அதற்கேற்ப நாம் வியூகங்களை வகுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

அடக்குமுறை சட்டங்கள் விவகாரம் : “பாஜக, RSS வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது” - கி.வீரமணி விமர்சனம் !

இப்பொழுதுள்ள பிரச்சினை என்ன? :

அதற்கு பெரியார் என்ற பேராயுதம் - அது மக்களுக்காக, மக்களால் பயன்படுத்தப்படும் துணிவில் தோய்ந்த படைக்கலன்! இப்போதுள்ள பிரச்சினை யார் மீண்டும் ஆட் சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் வரக் கூடாது என்பதுதான்! ஒடுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுள்ள பெரும் பான்மையினரான ஒடுக்கப்பட்ட மக்களும் - சிறுபான்மையினரும் தீயணைப்பில் ஒன்றுபட்டு நின்று தீயை அணைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டியது - வேறு எதற்கும் அல்ல; ஒருங்கிணைந்து போராடுவது - இந்தியா கூட்டணியின் மூலம் ஒற்றுமை உருவாகி விட்டது! இது பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். வயிற்றில் புளியைக் கரைத்து விட்டதால், அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களிலும் காவியச் சாயத்தைப் பூசி, எதேச்சதிகாரத்தை கட்டவிழ்த்து, “நாளை வரும் தேர்தலில் நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இனிவரும் எங்கள் ஆட்சி இருக்கும்“ என்று “ஒத்திகையை” நடத்திக் காட்டுகிறார்கள்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது திட்டமிட்ட செயலே! :

நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இதுவரை காணாத, அதிர்ச்சியான வகையில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் 148 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து விட்டு, மூன்று முக்கிய சட்டங்கள் - ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிற சட்டங்களை ஹிந்தி மொழித் திணிப்புத் தலைப்பாக நிறைவேற்றியுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுபோல, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீக்கம் - சஸ்பெண்ட் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாகவே சிந்திக்கும் தரமுள்ள எவருக்கும் புரியும்.

இரண்டு நோக்கங்கள் அதற்கு முக்கிய காரணிகளாக இருக்கக் கூடும்.

1. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் இவைபற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை விவாதிக்க விடாமல் தடுக்கும் நோக்கம்.

2. நாடாளுமன்றத்தில் - அதுவும் குறிப்பிடத்தக்க சரியான பாதுகாப்பு ஏற்பாட்டுக் குளறுபடிகள் பற்றிப் பேசிடுவதைத் தடுப்பது.

“முன்கூட்டியே திட்டமிட்டது இது” என்று காங்கிரஸ் தலைவர் கூறியதற்கு மற்றொரு ஆதாரமும் அதற்குக் கூறியுள்ளார். அவைக்கு அன்றைக்கு வராத உறுப்பினரும்கூட (மேட்டூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் - தி.மு.க.) சஸ்பெண்ட் செய்யப்பட்டது - எப்படிப்பட்ட கேலிக்கூத்து!

நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட நிலை என்றால் - உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் Pick and Choose என்ற தங்களுக்கு வேண்டியவர்களைப் பொறுக்கி எடுக்கும் தேர்வு நடைபெறுகிறது என்று உச்சநீதிமன்ற மூத்த கொலிஜியம் நீதிபதியே பகிரங்கமாகப் பேசும் நிலை!

அடக்குமுறை சட்டங்கள் விவகாரம் : “பாஜக, RSS வயிற்றில் புளியைக் கரைத்து விட்டது” - கி.வீரமணி விமர்சனம் !

பிஜேபியின் 9 ஆண்டு கால சாதனை என்ன? :

தேர்தல் கமிஷன் உறுப்பினர்கள் பதவி நீடிப்பு - அதில் காலியான உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடைபெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை மதிக்காது - ஆளும் தரப்பில் இரண்டு உறுப்பினர்கள் (பெரும்பான்மை) இப்படியாகப் பலப்பல. 9 ஆண்டுகளாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்துகளாகி நிற்கும் அவலம்! இவற்றை எல்லாம் மறைத்து பக்திப் போதையூட்டி - இராமன் கோயில் திறப்பைக் காட்டி வாக்குகளைத் திரட்ட மயக்க மருந்துத் திட்டம்.

“பக்தி என்பது வாக்கு வங்கியைக் குறி வைக்கும் தந்திரமே” என்பது தந்திரமான சர்வாதிகாரமே! :

பழைய ரவுலட் சட்டங்கள் - மிசா, பொடா, தடா முதலிய புதைக் குழிக்குச் சென்றவற்றின் புதிய தோற்ற வடிவம் தான். இவை ஜனநாயகப் பாதுகாப்பை உள் அடக்கிய - அரசமைப்புச் சட்டத்தை அரிக்கும் “செல்கள்” போன்றுள்ள பரிதாப நிலை என்றாலும், இவை எல்லாம் மக்கள் மன்றத்திற்கு முன் - பிரச்சாரப் பெரு மழையின்முன் சிதறுண்டுப் போகும்.

வருண பேதமற்ற பேதமில்லா - அனைவருக்கும் அனைத்தும் தரும் “சமூகநீதி ஆளும் திராவிட இந்தியா”வை உருவாக்க ஒன்றுபட்டு பிரச்சாரங்கள், களப் பணிகளைத் தொடர்ந்து செய்தாக வேண்டும்!

இந்தியா கூட்டணியின் கட்சிகள் விட்டுக் கொடுத்து பொது எதிரியை வீழ்த்த வேண்டும் :

இந்தியா கூட்டணியின் 28 கட்சிகளும் இணக்கமோடு, சுணக்கமின்றி சரியான பாதையில், விட்டுக் கொடுத்து, பொது எதிரியை மட்டுமே குறி வைத்துத் தேர்தல் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டால், திட்ட மிட்டால் வெற்றி நிச்சயம் நமக்குக் கைக்கூடும் என்பது உறுதி! உறுதி!

banner

Related Stories

Related Stories