
ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒன்றியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் “போஷன்” திட்டத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் செயலியின் பல்வேறு குறைகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒன்றியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "குழந்தை நலன் பராமரிப்பு பணியாளர்கள் “Poshan Tracker” செயலியை பயன்படுத்துவதில் உள்ள சவால்கள், ஒன்றிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஸ்மார்ட் போன்கள் பணியாளர்களுக்கு கிடைக்காமை, தரமற்ற சாதனங்கள் மற்றும் மற்றும் நம்பகத்தன்மையற்ற இணைய இணைப்பு தொடர்பான சிக்கல்கள் குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

குழந்தை நலன் பராமரிப்புப் பணியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் “Poshan Tracker” செயலியை திறம்பட கையாள வழிமுறைகளை உறுதி செய்வதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய சேகரிக்கப்பட்ட தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என கேள்வி எழுப்பினார்
அதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதில் குழந்தை நலன் பராமரிப்புத் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு கணக்கியல் தரவுகளிலிருந்து விளைவு அடிப்படையிலான அளவீடுகளுக்கு மாற்ற அமைச்சகத்தின் திட்டங்கள் என்ன என்றும், மொழித் தடைகளைத் தீர்ப்பதற்கும், கிராமப்புறப் பணியாளர்கள் அணுகக்கூடிய வகையில் மாநில மொழியில் செயலியை வழங்குவதற்கு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.








