மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2003-ம் ஆண்டு மாயாவதி தலைமையில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் தொடர்ந்து 18 ஆண்டுகள் அந்த மாநிலத்தை பாஜக ஆண்டு வருகிறது. பாஜகவின் ஆட்சிக் காலத்தில் மத்திய பிரதேச மாநிலம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
அதன் காரணமாகவே 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதையும் பாஜக எம்.எல்.ஏக்களை வளைத்ததன் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை தூக்கியெறிந்தது. இந்த நிலையில், பாஜகவின் 18 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் 29,000 பள்ளிகள் மூடப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் MP ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தும் அங்கு 26,000 அரசு பள்ளிகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 29,000 பள்ளிகள் மூடப்பட்டு 9 லட்சம் மாணவர்களின் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 23 வயதுக்குட்பட்ட 70 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது நிதிப்பற்றாக்குறை காரணமாக ஏராளமான பள்ளிகளை மூடினார். ஆனால், அதன்பின்னர் முதல்வரான காமராஜர் அந்த பள்ளிகளை திறந்தார் என்பதை படித்துள்ளோம். ஆனால், தற்போது பாஜக அரசு மீண்டும் அதே போன்ற சம்பவத்தை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.