அரசியல்

மக்களாட்சியின் கறுப்பு நாள்.. "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் EPS-முதலமைச்சர் விமர்சனம் !

மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக திருத்த மசோதா நிறைவேறிய சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களாட்சியின் கறுப்பு நாள்.. "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் EPS-முதலமைச்சர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு விவாதம் எதுவும் நடத்தாமல் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து வருகிறது.

அந்தவகையில் மக்களவையில் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவிற்கு இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் மக்களவையில் பா.ஜ.கவின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து நேற்று மாநிலங்களவையிலும் 29 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக போன்ற மாநில கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!

எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள்!

மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை.

"நான் யாருக்கும் அடிமையில்லை" என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, "கொத்தடிமையாக" தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது"என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories