முரசொலி தலையங்கம்

” இந்தி திணிப்புக்கு பின் சமஸ்கிருதம்”.. பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

இந்தியை ஆதரிப்பதன் மூலமாக இந்தி பேசும் மாநில மக்களை மயக்கி வாக்குகளை வாங்கலாமா என்ற நப்பாசை தான் பா.ஜ.க. வுக்கு இருக்கிறது.

” இந்தி திணிப்புக்கு பின் சமஸ்கிருதம்”.. பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (08-08-2023)

ஏமாற்றப்படும் இந்தி பேசும் மக்கள்!

“இந்தியை அனைவரும் எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் சொல்லி இருக்கிறார்!

எவர்?

“மூத்த மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லையே?” என்று சில நாட்களுக்கு முன்னால் இராமேஸ்வரத்தில் வருத்தப்பட்டாரே அவர்தான்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்படி வருத்தப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் இந்தியை அனைவரும் எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அருளாசி கூறி இருக்கிறார். இதுதான் இவர்களது உண்மை முகம் ஆகும். தமிழ்நாட்டுக்கு வந்தால் நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குப் போனதும் நஞ்சு பரப்புவதும் அவர்களது ஆட்டம் ஆகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாகவே சொல்லி இருக்கிறார். இப்படி இரண்டக ஆட்டம் ஆடுவது அவர்களுக்குப் புதிதல்ல.

இந்தியா என்பது பல்வேறு இனம் -மொழி –மதம் –பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் நாடு. வேற்றுமையில் நாம் காணும் ஒற்றுமையே இந்த தேசத்தைக் கட்டுக் கோப்பாகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறது. நமது கடந்த கால வளர்ச்சிக்கு இதுவே அடிப்படை. எதிர்கால வளர்ச்சிக்கும் இதுவே முக்கியம் என்பதும் வெளிப்படை. இதனை சீர்குலைக்கும் செயல்களை பா.ஜ.க. சிறப்பாகச் செய்து வருகிறது. ஒரே நாடு - ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே தேர்வு – ஒரே உணவு – ஒரே பண்பாடு - என்ற வரிசையில் ஒரே மொழியை திணித்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

” இந்தி திணிப்புக்கு பின் சமஸ்கிருதம்”.. பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

இந்தி என்பது இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. அரசு மொழியும் அல்ல. ஆங்கிலமும் இந்தியும் இந்தியாவின் அலுவல் மொழிகள் ஆகும்.‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்பட மாட்டாது’என்று இந்தியப் பிரதமர் நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி இருக்கிறது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசானது ‘இந்தி அரசாகச்’ செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது குடியரசுத் தலைவர் அவர்களுக்கு சில பரிந்துரைகளை அனுப்பியது. இந்தியே ஆட்சி மொழி, அரசு மொழி, பொதுமொழி என ஆக்குவதற்கான திட்டத்தின் தொடக்கமாக அது அமைந்திருந்தது.

இந்தியா முழுவதும் இந்தியைத் திணிக்கப் பரிந்துரைக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் அறிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் இயற்றினார்.

“இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது, இந்தி மொழியின் மேலாதிக்கத்துக்கு வழிவகுப்பதாக அமைந்திருப்பதால் அந்த அறிக்கையை குடியரசுத் தலைவர் அவர்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் கேட்டுக் கொள்கிறது. மாநில ஆட்சிமொழிகள் அனைத்தையும் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஆக்கிடத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது 2022 அக்டோபர் மாதத்தில்.

ஒரு மொழியை அழிப்பது என்பது அந்த மக்களின் இன கலாச்சார- பண்பாடுகளைச் சிதைப்பது ஆகும். இந்தியை வலுக்கட்டாயமாகத்திணிப்பதை எதிர்க்காவிட்டால் தமிழகத்தில் இந்தி தெரிந்தவர்க்கு மட்டுமே இனி ஒன்றிய அரசு வேலை என்ற நிலை உருவாகும். தேசிய அளவில் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்படும் நிலை உருவாகும். ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களும் இனி இந்தியில் மட்டுமே வரும்.

” இந்தி திணிப்புக்கு பின் சமஸ்கிருதம்”.. பா.ஜ.கவின் சூழ்ச்சி அரசியலை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!

தாய்மொழியை ஓரங்கட்டுவதன் மூலம் அதனை மட்டுமே நம்பியிருக்கும் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு இனி எட்டாக்கனியாகும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைல்கல் தொடங்கி, தபால், விமானம், வங்கி, கப்பல், ஏ.டி.எம். அனைத்து சேவையும் இந்தியில் மட்டுமே இருக்கும்.வரும்காலங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் ஐ.ஐ.டி. வரைஇனி தமிழக மாணவர்கள் படிக்க முடியாத நிலை உருவாகும்.

இந்­தியை எதிர்ப்பது, இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான எதிர்ப்பன்று. அது நம் தேசிய இனத்தை அடக்கியாளும் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகும். அதனால்தான் நமது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகிறோம். அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கமல்ல. அவர்களுக்கு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழி ஆக்குவதுதான் இறுதி இலக்கு ஆகும். சமஸ்கிருதம் ஆட்சி மொழி என்றால் அடிக்க வருவார்கள். அதனால் இந்தியை முதலில் சொல்கிறார்கள். இந்தியை உட்கார வைத்து விட்டு சமஸ்கிருதத்தை பின்னர் எடுத்துவரும் தந்திரம்தான் இது.

இந்தியை ஆதரிப்பதன் மூலமாக இந்தி பேசும் மாநில மக்களை மயக்கி வாக்குகளை வாங்கலாமா என்ற நப்பாசை தான் பா.ஜ.க. வுக்கு இருக்கிறது. ‘இந்தியை வாழவைத்தால் போதுமா? இந்தி பேசும் மக்களை வாழ வைக்க வேண்டாமா?’ என்று அந்த மாநிலத்து மக்கள் கேட்க மாட்டார்களா?

அவர்களது எந்தக் கனவும் நிறைவேறப் போவது இல்லை.

banner

Related Stories

Related Stories