முரசொலி தலையங்கம்

“எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி: நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும்..” : முரசொலி!

மீண்டும் நாடாளுமன்றத்தில் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும். வாக்களித்த வயநாடு மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பா.ஜ.கவின் எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

“எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி: நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும்..” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீதி வென்றது

"நீதி வென்றது" - என்ற இரண்டு சொற்களில் அனைத்தையும் சொல்லி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ராகுல் காந்தியை முடக்குவதன் மூலமாக இந்திய மக்களாட்சியின் மாண்பை முடக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜ.க.வும் எடுத்த முயற்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் அவர்கள், 'நீதி வென்றது' என்றே இந்தத் தீர்ப்பை அடையாளப்படுத்தினார்.

“இந்த உத்தரவு நமது நீதித்துறையின் வலிமைமீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், மக்களாட்சியின் மாண்புகளையும் காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது" என்பதும் முதலமைச்சரின் கருத்தாகும்.

ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்தது தனிப்பட்ட ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி மட்டுமல்ல, 'எங்களை எதிர்ப்போர் கதி இதுதான்' என்பதைக் காட்டினார்கள். எதேச்சதிகாரத்தனத்தை மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே காட்டினார்கள். எவ்வளவு அவசர அவசரமாக ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது என்பதில் இருந்தே இவர்களது நோக்கத்தை அறியலாம்.

“எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி: நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும்..” : முரசொலி!

2019 ஏப்ரல் 13 அன்று கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் இருந்து தலைமறைவாகிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்துப் பேசினார். 'மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் இப்படியா?' என்ற தொனியில் கேள்வி எழுப்பினார். மோடி என்பது குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் என்பதால் அனைவரையும் கொச்சைப்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

இன்றைய பிரதமர், மோடி என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார். முன்னிலைப்படுத்தப் படுகிறார். அந்த வகையில் அந்தச் சொல், இந்தியப் பொதுவெளியில் குறிப்பிட்ட பிரிவின் பெயராக இல்லாமல், பிரதமரின் பெயராகத்தான் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி சூரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி என்பவர், ராகுல் மீது கிரிமினல் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி அன்று ராகுலுக்கு எதிராக தீர்ப்பை வாங்கும் அளவுக்கு வேகவேகமாக நடத்தினார்கள். ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கிறது. இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் மறுநாளே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் ராகுல்.

“எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி: நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும்..” : முரசொலி!

தீர்ப்பைத் தந்தது உயர்நீதிமன்றமோ, உச்சநீதி மன்றமோ அல்ல. பெருநகர நீதிமன்றம்தான். இதற்கான மேல் முறையீட்டு விசாரணை கள் உயர்நீதிமன்றத்தில் நடத்தலாம். உச்சநீதிமன்றத்தில் நடத்தலாம். அங்கெல்லாம் உறுதியானால் தான் பதவி நீக்கம் செய்யலாம். ஆனால் ராகுல் காந்தி நாடாளு மன்றத்துக்குள் வர விடக் கூடாதென்ற சதி எண்ணத்தோடு, ஒரு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுநாளே அமல்படுத்தினார்கள். தீர்ப்பு வந்த 24 மணி நேரத்துக்குள்ளாக ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது.

சூரத் பெருநகர நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராகுல். அவருக்கு ஜாமின் வழங்கியது நீதி மன்றம். ஆனால் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்தது. கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராகுல். அவரது மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். அங்கும் அது, எதிர்பார்த்ததுதான்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ராகுல். இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பைத் தந்துள்ளது. 'ராகுல் காந்திக்கு தரப்பட்ட சிறைத் தண்டனைக்குத் தடை' விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

"ராகுல் காந்தியின் உரை நல்ல ரசனையுடன் இல்லை என்பதில் சந்தேகமில்லை. பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பொது வெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகம் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.

“அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க என்ன காரணம் என்பதை தீர்ப்பளித்த நீதிபதி சொல்லவில்லை. தண்டனைக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தந்திருந்தாலும் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்" என்று உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியதில் தான் இந்த பிரச்சினையின் மறைமுக அம்சங்கள் அடங்கி இருக்கின்றன.

“எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி: நாடாளுமன்றத்தில் மீண்டும் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும்..” : முரசொலி!

“ராகுல் காந்தி பொதுவாழ்வில் தொடர்வதற்கான உரிமையை மட்டுமின்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும் பாதித்துள்ளது" என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். மக்களாட்சி மாண்பை உணர்த்தியதன் மூலமாக உச்சநீதி மன்றத்தின் மீதான நம்பிக்கையும் உயர்ந்துள்ளது. அடுத்ததாக நாடாளுமன்றம் தனது மாண்பை உணர்த்த வேண்டும். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் நடத்தி முடித்தார்கள்.

அவரின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதன் மூலமாக ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடரும் அனுமதி கிடைத்துவிட்டது. இதனை ஏற்று பறிக்கப்பட்ட எம்.பி. தகுதி மீண்டும் தரப்பட வேண்டும். மீண்டும் நாடாளுமன்றத்தில் ராகுல் குரல் ஒலிக்க வேண்டும். வாக்களித்த வயநாடு மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பா.ஜ.க.வின் எதேச்சதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

- முரசொலி தலையங்கம் (07.08.2023)

banner

Related Stories

Related Stories