அரசியல்

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தடை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற 'இந்தியா' -தலைவர்கள் வாழ்த்து !

ராகுல் காந்தி குறித்த தீர்ப்பு வந்ததும் இந்தியாவின் பல்வேறு முக்கிய தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தடை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற 'இந்தியா' -தலைவர்கள் வாழ்த்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று அதற்கான தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டடைக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு முக்கிய தலைவர்களும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தீர்ப்பு வெளியானதும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "என்ன நடந்தாலும் கடமை தவற மாட்டேன், கடமை அப்படியே தொடரும். இந்தியா என்பதன் உண்மைத்தன்மையை பாதுகாப்போம்" என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தடை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற 'இந்தியா' -தலைவர்கள் வாழ்த்து !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், "அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது; சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தொகுதி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த மகத்தான தீர்ப்பு இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும். I.N.D.I.A-வின் குரலாக ராகுல் காந்தியின் குரல் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஒலிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.

"உண்மை மட்டுமே ஜெயிக்கும்.நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகம் வென்றிருக்கிறது. அரசியல் சாசனம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.ராகுல் காந்தியை வேட்டையாட பா.ஜ.க போட்ட சதி அம்பலப்பட்டிருக்கிறது.தீங்கிழைக்கும் நோக்கத்துடன் எதிர்கட்சி தலைவர்களுக்கு குறி வைப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும்.மக்கள் கொடுத்த வெற்றியை மதித்து, கடந்த 10 வருடங்களாக அவர்கள் தோற்றிருக்கும் நாட்டின் நிர்வாகத்தை கவனிக்கத் தொடங்க வேண்டும்" என - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தடை.. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற 'இந்தியா' -தலைவர்கள் வாழ்த்து !

"ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களுக்கான நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது".என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள நிலையில், "ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடும் ’இந்தியா’ கூட்டணியின் உறுதியை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது" என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜீ கருத்து தெரிவித்துள்ளார்.

அதே போல "மோடி ஆட்சி தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது. ஆனால், அந்த மமதைக்கு உச்சநீதிமன்ற‌ம் அணைபோட்டுள்ளது. 'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து‌ நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்" என CPIM தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தி மக்களவை சபாநாயகரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம். அடுத்த வாரம் நடைபெறும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராகுல் காந்தி நிச்சயம் பேசுவார்" என காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

"ராகுல் காந்தியை பாஜக வெல்ல முடியாது.பாஜக கடுமையாக முயற்சித்தும் கூட, ராகுல் காந்தி உடையவோ வளையவோ பணியவோ ஒப்புக் கொள்ளவில்லை. நீதியமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார்.பாஜகவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இது ஒரு பாடம் ஆகட்டும். நீங்கள் உங்களின் ஆகக் கொடுமையான கொடுமையையும் செய்யலாம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். ஓர் அரசாங்கமாகவும் ஒரு கட்சியாகவும் நீங்கள் அடைந்த தோல்விகளை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். அரசியல் சாசன விழுமியங்களை நாங்கள் நிலைநிறுத்துவோம். அழிப்பதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிக்கும் அரசு அமைப்புகளின் மீது நம்பிக்கையை மீட்டெடுப்போம். உண்மையே வெல்லும்!" என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories