அரசியல்

”மக்கள் அதிகாரம் முன்பு ஆளுநரின் தான்தோன்றித்தனம் காணாமல் போகும்”.. தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!

ஆளுநரின் அரசியல் தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம் என தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”மக்கள் அதிகாரம் முன்பு ஆளுநரின் தான்தோன்றித்தனம் காணாமல் போகும்”.. தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநரின் அரசியல் தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம். மக்கள் அதிகாரம் பொங்கி எழுந்தால் அதன்முன் ‘தான்தோன்றித்தனம்‘ காணாமல் போகும் என தி.க தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டு ஆளுநரான பச்சை ஆர்.எஸ்.எஸ்., மதவெறி உயர்ஜாதி மனப்பாங்குடன் (இவர் பீகாரின் ‘பூமி’கார் பிராமணர் என்ற மனப்பாங்குடனோ என்னவோ) தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவே அனுதினமும் ஒத்துழையாமை - போட்டி அரசு - சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுவது - பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி நியமனங்களில் சட்ட மீறலை வற்புறுத்தியும் நிரப்பிடாமல் அப்பதவி காலியாகவே உள்ள நிலை (ஓர் எடுத்துக்காட்டு, கோவை பாரதியார் பல்கலைக் கழகம்) சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் சுமார் 13 மசோதாகளுக்கு ஒப்புதல் அளிக்காமல், மாதக் கணக்கில் கிடப்பில் போட்டு வைத்தும், ஊழல் செய்தவர்களுக்கு (மேனாள் அமைச்சர்கள்) எதிராக வழக்குப் போட அனுமதி வழங்குவதையும் தவிர்த்து வருவதோடு, கோப்பே வரவில்லை என்று பொய் சொல்லி, சட்ட அமைச்சரின் மறுப்பு - கோப்பை இராஜ்பவன் பெற்றதற்கு ஆதாரம் உண்டு என்ற பதிலடிபற்றியும் வாய் திறக்காமல் மவுனம்; அமைச்சர் செந்தில்பாலாஜி விஷயத்தில் ஆப்பசைத்து, ஆழந்தெரியாமல் காலை விட்டு, டில்லி மேலிடத்தின் குட்டுகளையும் பெற்றுள்ளார்.

”மக்கள் அதிகாரம் முன்பு ஆளுநரின் தான்தோன்றித்தனம் காணாமல் போகும்”.. தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!

குழந்தை மணம் செய்துகொண்டதை பெருமையோடு பதிவு செய்த ‘விசித்திர மனிதர்!’

அதற்குமுன் உச்சநீதிமன்றத்தின் குட்டினையும் - பேரறிவாளன் வழக்கில் பெற்றவர் - இந்த அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற குழந்தை மணம் செய்துகொண்டதை பெருமையோடு பதிவு செய்த ‘விசித்திர மனிதர்’ இவர்!

இந்த ஆளுநர் அந்தப் பதவிக்குரிய தகுதியுடன் நடந்துகொள்ள மறுப்பவர் என்பதை அடுக்கடுக்கான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அவரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்ப அழைக்க முன்வரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “பொறுத்ததுபோதும்‘ என்று பொறுமை கடந்த நிலையில், ஒரு நீண்ட கடிதத்தை குடியரசுத் தலைவர் மேதகு திரவுபதி முர்மு அவர்களுக்கு எழுதியுள்ளார்.

எந்த நிலையையும் சந்திக்கத் தயார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதோடு நேற்று (9.7.2023) பகிரங்கமாக ஒரு திருமண மேடையில் பேசும்போது, தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல திட்டங்களைத் தீட்டவே இப்படி ஓர் அரசியல் அடாவடித்தன அலங்கோலம் அன்றாடம் அரங்கேறி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியதோடு, தாங்கள் எந்த நிலையையும் சந்திக்கத் தயார் என்று முழங்கியுள்ளார்!

ஆளுநரின் அரசியல் சண்டித்தனம் - தி.மு.க. ஆட்சிக்கு எதிரானது என்பதைவிட, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஓர் அரசியல் வன்மம்; காரணம், காவியை - காவிக்காரர்களை தமிழ் மண் - திராவிட மண் - பெரியார் மண் - சமூகநீதி சமத்துவ மண் அனுமதிக்க மறுப்பதல்லாமல், தென்னாட்டிலிருந்தே விரட்டுவதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறதே என்ற ஆத்திரத்தால் - தமிழ் மக்களுக்கு விடப்படும் அறைகூவல் இது! அதைத் தாண்டியும், பதவிப் பிரமாணம் எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும், அது வற்புறுத்தும் விழுமியங்களையும் காலில் போட்டு மிதிப்பதாகவே கருதப்படல் வேண்டும்!

”மக்கள் அதிகாரம் முன்பு ஆளுநரின் தான்தோன்றித்தனம் காணாமல் போகும்”.. தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!

குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

எனவேதான், இன்னமும் அந்த அறவழி முறையிலேயே நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் என்பதை, அரசமைப்புச் சட்ட மாண்புப்படி எழுதியுள்ளார்! ‘‘அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்‘’ என்பதை காலம் உணர்த்திட வைப்பது உறுதி!

நமது அரசமைப்புச் சட்டத்தில் நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் அதிகாரமான, மக்கள் அதிகாரம் பொங்கி எழுந்தால், தான்தோன்றித்தனம் அதன்முன் காணாமற்போகும் என்பதே ஆளுநர் ரவி உணர்ந்துகொள்ள மறுக்கும் பாடம்!

மக்கள்தான் ஆட்சியின் காவலர்கள்!

‘We the People’ இதுதான் முக்கியம் - புரிந்துகொள்ளவேண்டும் - புரியாதவர்களுக்குப் புத்தி போதிப்பவர்கள் அரசமைப்புச் சட்டப்படியே, மக்கள்! மக்கள்!! மக்கள்!!! அவர்கள் நம் ஆட்சியின் காவலர்கள் - டில்லி ஏவலரே புரிந்து செயல்படுவீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories