அரசியல்

“கர்மா அடிப்படையில் தீர்ப்பா ?” : நீதிபதிகள் சட்டத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும் - தீக்கதிர் சாடல்!

'விபரீதங்களுக்கு வித்திட்டு விடக்கூடாது' என தீக்கதிர்' நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

“கர்மா அடிப்படையில் தீர்ப்பா ?” : நீதிபதிகள் சட்டத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும் - தீக்கதிர் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீதிபதிகள் மீது மக்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நீதிபதிகள் சட்டப் புத்தகத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை அல்ல என தீக்கதிர்' நாளேடு 8.10.2022 தேதியிட்ட இதழில் 'விபரீதங்களுக்கு வித்திட்டு விடக்கூடாது' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பின்வருமாறு:

ஒருவர் தனிப்பட்ட முறையில் கர்மா கோட்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்பாரேயானால் அது அவரது தனிப்பட்ட விசயம். ஆனால் அரசியல் சாசனப்படி தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கர்மா கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்குவதாக கூறினால் அது பல்வேறு விபரீதங்களுக்கு இட்டுச் செல்லும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் தனி நீதிபதி ஸ்ரீமதி வழக்கு ஒன்றில் கர்மா அடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குவதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதி ஸ்ரீமதி தன்னுடைய தீர்ப்பில் சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா என கர்மா இருவகைப்படும் என்றும், பிராரப்த கர்மாவுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படும். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று கூறியிருந்தார்.

“கர்மா அடிப்படையில் தீர்ப்பா ?” : நீதிபதிகள் சட்டத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும் - தீக்கதிர் சாடல்!

நல்வாய்ப்பாக இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் நீதிபதிகள் வேல்முருகன், கே.குமரேஷ் பாபு அமர்வு கர்மா கோட்பாடு அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. எந்தவொரு வழக்காக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் தான் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கவேண்டும்.

நீதிபதிகள் தங்கள் மனோதர்மத்தின்படி கர்மா கோட்பாட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக ஆரம்பித்தால் நீதித்துறையே நிலைகுலைந்து விடும். உதாரணமாக கொலை வழக்கு ஒன்றில், கொலை செய்யப்பட்டவர் அவரது கர்மாவின் பலனையே அடைந்துள்ளார். எனவே கொலை செய்தவரை விடுவிக்கிறோம் என்று கூறினால், அதை ஏற்க முடியுமா? திருட்டு வழக்கில், இந்த பொருளை பறிகொடுக்க வேண்டும் என்பது அவரது கர்மவினை. எனவே திருடியவர் மீது தவறில்லை என்று கூறினால் அதை ஏற்க முடியுமா?

இந்த வழக்கில் அரசுத் தரப்பு, நீதி அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க முடியும். கர்மா அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு சட்டத்திற்கு அப்பாற்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதை தடுக்க நீதித்துறை உரிய கண்காணிப்பை செய்வது அவசியம்.

“கர்மா அடிப்படையில் தீர்ப்பா ?” : நீதிபதிகள் சட்டத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும் - தீக்கதிர் சாடல்!

நீதிபதிகள் மீது மக்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகேஷ் சந்திர சர்மா என்பவர் ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று கூறியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

அண்மையில் பாஸ்போர்ட் மோசடி என தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை ஜனநாயகத்தின் காவலர் என்று சம்பந்தமில்லாமல் பாராட்டியதும் சர்ச்சை யை ஏற்படுத்தியது. நீதிபதிகள் சட்டப் புத்தகத்தை மட்டுமே புனிதமாக கருத வேண்டும். தங்க ளுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை அல்ல.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories