
புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான தடை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று, பா.ஜ.க.வினர் ஒதியன்சாலை காவல் நிலையம் எதிரே உள்ள சாலையை ஆக்கிரமித்து பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் மோதி முதியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சம்பவ இடத்திலிருந்த புதுச்சேரி போராளிகள் குழுவின் தலைவர், சுந்தர் என்பவர் இதுகுறித்து ஒதியன்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறையினரிடம் முறையிடுமாறு போலிசார் சுந்தரிடம் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி ஏழுமலை என்பவரிடம் புகார் அளிக்க சுந்தர் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காலப்பட்டு தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தின் உதவியாளர் பாலாஜி உள்ளிட்ட 20 க்கும் பா.ஜ.க.வினர், அரசு அலுவலகத்தில் வைத்து போலிசார் முன்னிலையில், சுந்தரை கடுமையாக தாக்கியும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த சுந்தரின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற சமூக ஆர்வலர்கள் மீது பா.ஜ.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








