அரசியல்

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல் மொழி என்றால்; இங்கு இந்தியும் அயல் மொழிதான் - அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி

நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல் மொழி என்றால்; இங்கு இந்தியும் அயல் மொழிதான் - அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தித் திணிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

”உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். அத்துடன் நில்லாமல், ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான அடக்குமுறைப் போக்கு ஆகும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும், ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியே ஆகும்.

அது மட்டும் அல்ல; இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்துறை அமைச்சகம், இந்தியில் மட்டுமே கடிதங்களை அனுப்பி வருகின்றது. மின்அஞ்சலும் அப்படித்தான் வருகின்றது. எதிர்ப்புத் தெரிவித்தால், அதன் பிறகுதான் ஆங்கிலத்தில் அனுப்புகின்றார்கள்.கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டு அரசுக்கு அனுப்பிய கடிதங்களையும் இந்தியிலேயே அனுப்பியதாகச் செய்திகள் வந்தன. அடிமை ஆட்சி எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. அவ்வாறு, உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே, திராவிட இயக்கம் இந்தியைக் கடுமையாக எதிர்த்து வருகின்றது. தமிழ்நாட்டில், தமிழும், ஆங்கிலமும்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டம் இயற்றிப் பாதுகாப்பு அளித்தார்கள். அதனால்தான் இன்றைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள், ஆங்கிலம் நன்கு படித்து, உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகின்றார்கள். ஆங்கிலம் படிக்காத வட இந்தியர்கள், தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வருகின்றார்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்திக்கு எதிரான விழிப்பு உணர்வு இல்லை. இந்தி, தங்கள் மாநில மொழியை அழித்து விடும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அண்மைக்காலமாகத்தான், கேரளம், கர்நாடகம், மராட்டியம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்தி ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு வருகின்றார்கள். எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன.

பஞ்சாப் மாநிலத்தில், பஞ்சாபி மொழிக்கு முன்னுரிமை அளித்து, இரண்டு நாள்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டமன்றம் தீர்மானம் இயற்றி இருக்கின்றது. பெயர்ப்பலகைகளில், பஞ்சாபி மொழியில்தான் முதலில் எழுத வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழில்தான் முதலில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தி, திராவிட இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, 1970 களில் இருந்தே, தமிழில்தான் முதலில் எழுதப்படுகின்றது. ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களில், இந்தி மொழியிலேயே முதலில் எழுதுகின்றார்கள்.

உலக நாடுகளின் பொதுப்பேரவை மற்றும் மனித உரிமைகள் மன்றத்தில், ஆறு மொழிகளில் அலுவல் நடைபெறுகின்றது. அதுபோல, இந்தியாவின் அரசு அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்று உள்ள அனைத்து மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். முதல் கட்டமாக, தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்.

இன்று எத்தனையோ மொழிபெயர்ப்புக் கருவிகள் வந்து விட்டன. நமது கையில் உள்ள அலைபேசி கூட ஒரு மொழிபெயர்ப்புக் கருவிதான். வேறு எந்த மொழியில் எழுதி இருந்தாலும், அதை ஆங்கிலத்திற்கு, தமிழுக்கு ஒரே நொடியில் மொழிபெயர்த்துத் தருகின்றது. எனவே, இந்தியைப் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இனி ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடப் படிக்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், தந்தை பெரியார் அவர்கள், ‘வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால், தமிழன் இந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்’ என்று சொன்னார். அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது."

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories