அரசியல்

கொடநாடு: குற்றவாளிகளை ஜாமினில் கொண்டு வந்து சலுகை காட்டிய EPS இதை பேசலாமா? - பத்திரிகையாளர் சரமாரி தாக்கு

சகல அதிகாரத்தோடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே, "நடந்த அத்தனை சம்பவங்கள் பற்றியும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும்" என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சயான் பேட்டி அளித்தார்.

கொடநாடு: குற்றவாளிகளை ஜாமினில் கொண்டு வந்து சலுகை காட்டிய EPS இதை பேசலாமா? - பத்திரிகையாளர் சரமாரி தாக்கு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பத்திரிக்கையாளர் எஸ்.பி. லட்சுமணன்சன் நியூஸ் தொலைக் காட்சிக்கு அளித்தபேட்டி...

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவம் தொடர்பாக தன்னை இந்த வழக்கில் சேர்த்து விடுவார்களோ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்த அரசு அரசியல் ரீதியாகப் பழிவாங்குகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சிக் காலங்களில் அவரது நிர்வாகத்தின் கீழ் ஊழல் நடந்திருந்தால், அது தொடர்பாக புதிய அரசு வழக்கு தொடர்ந்தால், வழக்கமாகச் சொல்வது போல "நான் மக்கள் பணியைத்தானே செய்தேன் ஆனாலும் என்னைப் பழிவாங்குகிறார்கள்..." என்று சொல்லலாம்.

ஆனால் கொள்ளை, கொலை போன்ற அதி தீவிர குற்ற வழக்குகளில் எந்த அரசும் எவர் பெயரையும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் பெயரை அவ்வளவு எளிதில் சேர்க்காது - உரிய ஆதாரங்கள் இல்லாமல்! இந்த கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகுதான் வெளிவருகிறதா இல்லை! அவர் சகல அதிகாரத்தோடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே, "நடந்த அத்தனை சம்பவங்கள் பற்றியும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும்" என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சயான் பேட்டி அளித்தார்.

அது தவறு என்றால், அதை சட்டபூர்வமாக அணுகி அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, சயானின் மீது ஏதாவது வழக்குப்போட்டு அவரை மீண்டும் சிறையில் தள்ளி அவரது வாயை அடைப்பதில்தான் ஆர்வம் காட்டினார். அவசர கோலத்தில் சயான் மீது குண்டர் சட்டத்தை ஏவியதற்காக உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கும் ஆளானது எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்தின் கீழிருந்த காவல்துறை. இப்போது அந்த சயானை போலீஸார் மீண்டும் விசாரித்திருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளி வந்ததுமே மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதற்றம் தெரிகிறது.

அந்த சயான் உண்மையிலேயே வாக்குமூலம் கொடுத்தாரா? அதில் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா? அது சட்டப்படி செல்லுபடி ஆகுமா? நீதிமன்றம் அதை அனுமதித்திருக்கிறதா? சயான் அப்ரூவராக மாறி, அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா அதன் காரணமாக அவர் மீண்டும் வாக்குமூலம் அளித்திருக்கிறாரா? என்று எழும் அத்தனை கேள்விகளுக்கும் இன்னும் பதில் கிடைக்காதபோது, தனது பதற்றத்தை வெளிக்காட்டுவது போல, சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வது, சாலை மறியல் செய்வது, ஆளுநரைச் சந்திப்பது என்று அடுத்தடுத்து நிகழ்வுகளை நடத்திக்காட்டி தனது தரப்பு பதற்றத்தை இவ்வளவு வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமி காட்டுவதுதான் அ.தி.மு.க. தொண்டர்களையே வியப்படையச் செய்திருக்கிறது.

கொடநாடு: குற்றவாளிகளை ஜாமினில் கொண்டு வந்து சலுகை காட்டிய EPS இதை பேசலாமா? - பத்திரிகையாளர் சரமாரி தாக்கு

‘தி.மு.க. அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது’ என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சட்டப்படி பார்த்தால், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, சாட்சிகளை அந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை பாதுகாப்பதுதான் சட்டப்படியான ஓர் அரசின் கடமை. அதைச் செய்யாமல், குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகப்பட்டவர்களை கார் ஏற்றிக் கொல்வது... தற்கொலைக்குத் தூண்டுவது... போன்றவைதான் ஓர் அரசு அல்லது அரசின் ஆதரவில் எவரும் செய்ய வேண்டிய செயல்களா? உண்மையைச் சொல்லப்போனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொடநாடு வழக்கில் தீவிரம் காட்டி அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கி, உரிய காலமான 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கட்டாய ஜாமீனில் வெளியே வந்ததன் மூலம் அவர்களுக்கு மறைமுகமாக சலுகை காட்டியது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த அதுபோன்ற தவறுகள் இனியும் நடைபெறாமல், இந்த வழக்கு இனிமேலாவது நியாயமாக நடக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் விசாரிக்க வேண்டும்.

1. கொடநாடு கொள்ளை கும்பலுக்கு தலைமை தாங்கிப் போன சயான் பயணித்த கார் மீது இன்னொரு வாகனத்தால் மோதி அவரது மனைவியும், மகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். ஒரு வகையில் சயானுக்கு வைக்கப்பட்ட குறிதான் இது என்றால் அதைச் செய்ததுயார்?

2. சயான் கும்பலை இந்த கொள்ளை சம்பவத்திற்காக பணியமர்த்தி மூளையாகச் செயல்பட்டது ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ்தான் என்ற தகவல் வெளியான உடனேயே, அதாவது சயான் குடும்பத்தினர் கொல்லப்பட்ட நான்காவது நாளே அந்த கனகராஜும் ஒரு விபத்து மூலம் கொல்லப்பட்டார். அது நிஜமாகவே விபத்துதானா? திட்டமிட்டு நடந்திருந்தால், அதற்குப் பின்னணியில் இருப்பது யார்?

3. கொள்ளை நடந்தபோது சி.சி.டி.வி. கேமராக்களை அணைத்து வைக்கச் சொல்லிவிட்டுதான் இந்த கொள்ளை கும்பல் உள்ளே போனது. அந்த சி.சி.டி.விக்குப் பொறுப்பாக இருந்த தினேஷ்குமார் என்பவர் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சொன்னார்கள். அது உண்மையானால் அவரை தற்கொலைக்குத் தூண்டியதுயார்?

4. இந்த மூன்று விஷயங்களையும் விசாரித்துவிட்டு, அதில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ எடப்பாடி பழனிசாமிக்கு ஏதேனும் தொடர்பிருப்பதாக ஆதாரம் கிடைத்தால் அதன்பிறகு எடப்பாடிபழனிசாமியை விசாரிக்க வேண்டும்.

சட்டபூர்வமான இதுபோன்ற நடைமுறைகள் இன்னும் நிலுவையில் இருக்கிற போதே... அ.தி.மு.க.வினர் தங்களது பதற்றத்தை இன்னும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் கவலையிலும், பீதியிலும் ஆழ்த்தியிருக்கிற இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது காவல்துறையின் நடவடிக்கைகள் இந்த புதிய அரசு அமைந்த பிறகாவது நியாயமாக அமையுமா? என்ற கேள்விகளுக்கான பதிலை அரசுத் தரப்பிடம் இருந்து பெறும் வகையில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரான செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

அவரது கோரிக்கை சபாநாயகரின் ஆய்வில் இருக்கிறது. அதற்குள்ளாக, இதுபற்றி விவாதிக்கக்கூடாது.. செல்வப்பெருந்தகை யார் தெரியுமா? அவரது பின்னணி தெரியுமா? தி.மு.க.வின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார்... என்று சொல்லி தனது பதற்றத்தை பொதுவெளியில் மீண்டும் காட்டியிருக்கிறார்கள் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள். தன்னுடைய கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி கிடைத்தால், எடப்பாடி பழனிசாமி, தன்னை பொய் வழக்கில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாகக் கூறியிருக்கிறாரே... அது உண்மைதானா? என்ற கேள்வியையும் கூட செல்வப் பெருந்தகை சட்டமன்றத்தில் எழுப்பியிருக்கக்கூடும். அது எடப்பாடி பழனிசாமியின் வாதத்திற்கு வலுசேர்க்கும்தானே? அவர் என்ன சொல்லப்போகிறார்?

எதற்காக அவையின் கவனத்தை ஈர்க்க நினைத்தார் என்று தெரிந்துகொள்ளும் முன்னரே அவரது தீர்மானத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. கொடநாடு விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் விவாதிக்கக்கூடாது என்கிறார்கள். உண்மைதான். ஓர் எல்லை தாண்டி, வழக்கின் போக்கைத் தீர்மானிக்கும் அளவுக்கு விவாதிக்கக் கூடாதே தவிர, பேசவே கூடாது என்பது விதியல்ல. கடந்த காலங்களில் காவிரி, ஜல்லிக்கட்டு, எழுவர் விடுதலை என்று எத்தனையோ விஷயங்களில் சட்டமன்றம் தன் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறதே? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை- மகன் என இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், அந்த வழக்கின் தன்மையைப் பாதிக்க வாய்ப்புள்ள வகையில், அந்த மரணங்களுக்கான காரணமாக காவல்துறையினர் எழுதிக் கொடுத்த அறிக்கையை இதே எடப்பாடி பழனிசாமி அவையில் படித்தாரே?

முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை அரசியலுக்காக அவையில் எழுப்ப முயல்வது மரபல்ல என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்படியானால், அ.தி.மு.க.வினர் அவையில் எழுப்ப விரும்பாத இந்த கொடநாடு விவகாரத்தை முதன்முதலில் அவையில் எழுப்ப முனைந்தாரே எடப்பாடி பழனிசாமி? அது எந்த வகையில் சரி? ஆக, இனிமேலாவது அ.தி.மு.கவினர் தங்களது பதற்றத்தை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, இவ்வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட் 27ம் தேதி வரையாவது அமைதி காக்க வேண்டும். அன்றைய தினம்தான் இந்த வழக்கில் புதிதாக என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? புதிய ஆதாரம் ஏதாவது கிடைத்திருக்கிறதா? அந்த ஆதாரம் புதிதாக யாரையாவது குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறதா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும்.

banner

Related Stories

Related Stories