அரசியல்

“கமிஷனுக்காகவே பல கோடி செலவில் கிடங்கு கட்டியது அதிமுக” - அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு AKS விஜயன் பதிலடி!

இ-கொள்முதல் என்று அறிவித்துவிட்டு, கடன் பெற்றுச் செய்த விவசாயத்தில் விளைந்த நெல்லை விற்றுப் பணம்பெற வந்த விவசாயிகளிடம், மேலும் கடன் வாங்க வைத்து, அந்தப் பணத்தை கமிஷனாகப் பெற்றதுதான் அ.தி.மு.க.

“கமிஷனுக்காகவே பல கோடி செலவில் கிடங்கு கட்டியது அதிமுக” - அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு AKS விஜயன் பதிலடி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது தன் துறை அதிகாரியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் பதவியை இழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரை வேக்காட்டு அறிக்கைக்குத் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியும் மாநில திராவிட முன்னேற்றக்கழக விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ் விஜயன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

”தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசு, விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வரும் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் எந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டிருந்ததையும், அந்த கமிஷன் தொகைக்கு உணவுத்துறை அமைச்சர் “காமராஜ் கமிஷன்” தொகை எனப் பகிரங்கமாகப் பெயர் வைத்து இருந்ததையும் டெல்டா பகுதி விவசாயிகள் அனைவரும் நன்கு அறிவர். இதை மறந்து நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டு அமைச்சர் பதவியை இழந்த அ.தி.மு.க. விவசாயப்பிரிவுச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த நெல் வாரக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டன . அதனால் மாநிலத்தில் பல இடங்களில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் மழையில் நனைந்த நெல்மணிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே முளைத்து வீணானதைக் கேள்வியுற்ற கழகத் தலைவர் தளபதி எங்களுக்கு ஆணையிட்டதன்படி நாங்கள் ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையத்திற்கும் சென்று ஆய்வுசெய்து அதனைத் தடுக்க அரசை வலியுறுத்திப் பலகட்டப் போராட்டங்களை நடத்தினோம். அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தன் சொந்த மாவட்டத்திலேயே நடந்த இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாது விவசாயிகளைச் சந்திக்காமல் நெல்மூட்டை ஒன்றுக்கு நாற்பது ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் பெறுவதை மட்டுமே வாடிக்கையாக ஆட்சியின் இறுதிநாள் வரை வைத்திருந்தார்.

டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்திப் பொருட்கள் வீணாகக் கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் செலவில் பல சேமிப்புக் கிடங்குகளைக் கட்டிப் பயன்படுத்த முடியாத நிலையில் வைத்ததோடு பெயரளவில் தூர்வாரும் பணி என அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அ.தி.மு.க.வைப் போன்றவர்கள் அல்ல நாங்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும், அதிமுக விவசாயப்பிரிவுச் செயலாளரும் புரிந்துகொள்ள வேண்டும்.

“கமிஷனுக்காகவே பல கோடி செலவில் கிடங்கு கட்டியது அதிமுக” - அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு AKS விஜயன் பதிலடி!

"நமக்கு நாமே பயணம்”, “காவேரி மீட்புப் பயணம்” எனத் தொடர்ந்து விவசாய ஆதரவுப் பேரணிகளை நடத்தியும் , விவசாயப் பிரதிநிதிகள் கூட்டம் , எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சி கூட்டம் எனத் தொடர் விவசாய ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்ட கழகத் தலைவர் தமிழக விவசாயிகளுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து அதனைக் கழக ஆட்சியில் ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பொதுமக்களின் பாராட்டினைப் பெறும் வகையில் வேளாண் பாசன வசதிக்கு என முறை, பாசன மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி, கழக ஆட்சியின் தொடர் சாதனையான ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு, முறைப்படி தூர்வாரப்பட்டதால் கடைமடை பகுதிவரை விவசாயப் பயன்பாட்டிற்குத் தண்ணீர் சென்று சேர்ந்த சிறப்பு, முதலைச்சரின் சிறப்பு குறுவை சாகுபடித் திட்டம் என இப்படிப் பல அரிய திட்டங்களை, பொறுப்பேற்ற முதல் இரண்டே மாதங்களில் செய்துவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற அரைவேக்காட்டு அ.தி.மு.க.வினர் அறைக்குள் உட்கார்ந்துகொண்டே அறிக்கை விடுவது கண்டிக்கத்தக்கதாகும்.

இ-கொள்முதல் என்று அறிவித்துவிட்டு, கடன் பெற்றுச் செய்த விவசாயத்தில் விளைந்த நெல்லை விற்றுப் பணம்பெற வந்த விவசாயிகளிடம், மேலும் கடன் வாங்க வைத்து, அந்தப் பணத்தை கமிஷனாகப் பெற்றதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறையின் 'சாதனை'. கொள்முதலுக்கு எனக் கொடுக்கப்பட்ட சாக்குகளில் முதல் சுற்றுச் சாக்குகள் மட்டுமே நல்ல சாக்குகளாக வைக்கப்பட்டு, உள்ளே பாழ்பட்ட சாக்குகள் வைக்கப்பட்டதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாநில நெல்லைக் கொண்டு வந்து கொள்ளை அடித்ததும் ஒரு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அதே நெல்லை முறைகேடாக வேறொரு நெல் கொள்முதல் நிலையத்திற்குத் திருட்டுத்தனமாகக் கொண்டு செல்லப்பட்டபோது பொதுமக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டதும் உங்கள் ஆட்சியில்தான் என்பதை மறந்து மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சிலை உமிழாதீர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களே.

இப்படி அடுக்கடுக்கான தவறுகளையும், விவசாய விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்ட அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை எல்லாம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல மறைத்து, இரண்டே மாத தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அத்தனையும் சரி செய்யப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பதுவே நீங்களே தி.மு.க. ஆட்சியின் மீதும் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது.

"விவசாயி" என்று மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் குறிப்பிட்டதன் அர்த்தம் தெரியாமல் விவசாயி என ஏற்றுக்கொண்டதாக அறிக்கை விடுத்துள்ளார் அக்ரி என்று தன் பெயரில் சேர்த்துள்ள கிருஷ்ணமூர்த்தி.

50 ஆயிரம் டன் கொள்ளளவிற்குச் "சைலோ" கட்டியது அந்த மாவட்டத்தில் உள்ள நெல்லைச் சேமிக்க என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய அப்போதைய முதல்வர் மூன்றாண்டுகளுக்கு முன் திறந்து வைத்தும் முழுப் பயன்பாட்டுக்கு ஏன் வரவில்லை என்று காமராஜ் அவர்களைக் கேட்டுச் சொல்ல முடியுமா? அதனால் தான் திறந்த வெளியில் நெல்லைச் சேமிக்கும் நிலை ஏற்பட்டது என்ற உண்மையைப் புரிந்தும் கடந்த அதிமுக ஆட்சியின் சீரழிவான நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று தெரிந்தும் பதில் அறிக்கை விட வேண்டும் என்பதற்காக மழுப்பலான பதிலறிக்கையை வெளியிட்டுள்ளார்.

எதிர்பாராத மழையின் காரணமாகச் சில இடங்களில் நெல்லுக்குச் சேதம் ஏற்படுகின்றது என்று தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்தவுடனே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரையும், உணவுத்துறை அமைச்சரையும் தலைமைச்செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாகக் கூட்டத்தை நடத்தி இதற்குத் தீர்வுகாண வலியுறுத்தினார். அதன்படி நெல் அதிகம் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்களுடன் உடனடியாகக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நெல் மழையில் நனைதல் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் நெல் கொள்முதல், பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முன்னுரிமை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது போன்று விவசாயிகளின் பிரச்சினைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் அரசுதான் மாண்புமிகு முதலைச்சர் தளபதி அவர்களின் அரசு என்பது விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். தவறு எங்கு நடந்தது என்று குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு அமைச்சரின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தும் குறிப்பிட்டுக் கூறாத போலி விவசாயிக்கும் அதிமுக விவசாய அணிச்செயலாளருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் இனிமேலாவது அரசியலுக்காக அறிக்கை விடாமல் மக்கள் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories