அரசியல்

“பா.ஜ.கவோடு கூட்டணி வைத்தால் இந்த கதிதான் நேரும்” - அ.தி.மு.கவை சாடிய தமிமுன் அன்சாரி!

தமிழக தேர்தம் முடிவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.கவோடு கூட்டணி வைத்தால் இந்த கதிதான் நேரும்” - அ.தி.மு.கவை சாடிய தமிமுன் அன்சாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைமையிலான புதிய ஆட்சி சாதனைகள் படைக்க மனமாற வாழ்த்துகிறோம் எனக் குறிப்பிட்டு ம.ஜ.க பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பா.ஜ.கவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த தி.மு.க தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது.

தன் இளமைக் காலம் முதல், தமிழக மக்களுக்காக பல வகையிலும் உழைத்த அவருக்கு, மக்கள் தற்போது முதல்வர் பதவியை அளித்து கௌரவித்து இருக்கிறார்கள். திராவிட இயக்கத்தை தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்தி செல்லும் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்.

அதுபோல் மேற்கு வங்கத்தில் அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் எதிர்கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈட்டிய பெரும் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாகும். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் சிறப்பான வெற்றியை பெற்று இடதுசாரி கூட்டணி ஆட்சியை கூடுதல் பலத்துடன் தக்க வைத்திருக்கிறது.

தமிழர்களும், வங்காளிகளும், மலையாளிகளும் ஒரு அரசியல் பாடத்தை நாட்டுக்கு நடத்தி இருக்கிறார்கள். அந்தவகையில் நேற்றைய தேர்தல் முடிவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த எழுச்சியை தேசிய அளவில் கட்டமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்முயற்சிகளை அதன் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அவர் தலைமையிலான புதிய ஆட்சி பல சாதனைகளைப் படைக்க மனமாற வாழ்த்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories