அரசியல்

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ - நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” - பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!

சமூகநீதிக்கு எதிரான - தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி என்பது வீண் கற்பனை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ - நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” - பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட மண்ணில், சமூகநீதி விரோத பா.ஜ.க. - அதனோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது பற்றி கனவு காண வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

21.11.2020 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு தடுப்பணை திறப்பு விழா - மற்ற பல அடிக்கல் நாட்டு விழாக்கள் முதலியவற்றை உள்ளடக்கிய அரசு விழா. அவ்விழாவை அரசு விழாவாக நடத்தாமல், அரசியல் கூட்டணி அறிவிப்பு, உறுதி செய்தல், பிரச்சார விழாக்களாக்கி, எதிர்க்கட்சிகளைச் சாடிய ஒரு மரபு மீறிய அலங்கோல அரங்கேற்ற விழாவாக அது முடிந்தது. இதில் பெரும் பங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவினுடையது; அதற்கடுத்து தமிழக துணை முதல்வர், முதல்வர் ஆகிய அ.தி.மு.க.வின் இருபெரும் ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சு!

அரசு விழாவில் அரசியல் முடிவுகள் சரியானதுதானா?

‘அரசியல் பேசுகிறேன்’ என்பதை வெளிப்படையாகவே பிரகடனப்படுத்தியது பா.ஜ.க. அது எந்த அளவுக்கு ஜனநாயக மரபுகளையும், மாண்புகளையும் மதிக்கும் ஓர் அரசியல் கட்சி என்பதை உலகத்தோருக்குப் புரிய வைக்கும் ஒரு நிகழ்ச்சி அது! அரசு விழா என்றால், மக்கள் வரிப் பணத்தில் நடைபெறும் விழா. அதை கட்சிப் பிரச்சார மேடையாக ஆக்கிய வெளிச்சம் வெளிப்படையாகவே தெரிந்தது!

அது ஒருபுறமிருந்தாலும், இதில் பிரகடனப்படுத்தப்பட்டது - நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ‘‘வரம்‘’ பெற்றார் - பல மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் ‘தேர்தல் வியூகியாக’ உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே அவசர அவசரமாக இந்தக் கூட்டணி அறிவிப்பு - அதிலும் நிர்ப்பந்தத்தாலும், திணிக்கப்படுவதாலும் அமைந்துள்ள பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டு என்பதன்மூலம் தமிழ்நாட்டின் பல உரிமைகளை மத்திய ஆட்சிக்கு அடகு வைத்து, வாய்மூடி ‘‘பிணைக் கைதி’’ போன்ற அரசியலை நடத்தும் அ.தி.மு.க. தலைமையின் போக்கைக் கண்டு, அக்கட்சியில் உள்ள பல முக்கியஸ்தர்களும், தொண்டர்களுமேகூட அதிர்ச்சி அடையும் வகையில் இந்த அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ - நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” - பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!

‘லேடியா - மோடியா?’ என்ற முழக்கம் நினைவில் இருக்கிறதா?

இனிமேலும் இவர்கள் ‘‘எம்.ஜி.ஆர். ஆட்சி, அம்மா ஆட்சி’’ என்று கூறுவதில் பொருள் இருக்க முடியுமா? காரணம், செல்வி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவரை அவர் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் ‘‘லேடியா? மோடியா?’’ என்று பகிரங்கமாகவே மேடைகளில் முழங்கி, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு உள்பட பல உரிமைகளை பா.ஜ.க. அரசிடமே பெற்றவர்.

அந்த நிலை.... இன்று? அக்கட்சியின் தொண்டர்கள் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களை ஏமாற்ற ‘வித்தைகள்’ பயன் தராது! இந்த அவசரப் பிரகடனம் பா.ஜ.க.வுக்கு ஏன் தேவைப்பட்டது? ‘‘பறப்பதை’’ப் பிடிக்க ஆசைப்பட்டு ‘‘இருப்பதை’’ அகற்றும் திட்டம் கருச்சிதைவாகிவிட்டது!

இடைத்தரகர்களான அரசியல் புரோக்கர்கள் தயாரித்த குதிரை, ரேசுக்கு வராது; வந்தாலும் இனி பயன்படுமா என்பது சந்தேகம் என்றவுடன், தமிழ்நாட்டில் அடுத்த பெரிய இயக்கம் ஆளும் அ.தி.மு.க. எனவே, இருப்பதை விட்டுவிட்டால், தங்களது 10 ஆண்டுகால ‘‘கனவு’’த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட முடியாது என்பதற்காகவே இப்போது தங்களிடம் உள்ள ஆட்சி பலம், அதிகார பலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி, மடியில் கனத்தோடு உள்ள மாண்புகளை வழிக்கு வரச் செய்ய இப்படி ஒரு அவசரக் கோலம் அள்ளித் தெளிக்கப்பட்ட நிலை!

பா.ஜ.க.வுக்கு 50 இடங்களா?

சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின்படி 50 இடங்கள் - 40 இடங்கள் தங்களுக்கு அ.தி.மு.க. தந்துவிடவேண்டும்; (உள்ளது மொத்தம் 234 இடங்கள்) அதுவும் கொங்கு மண்டலத்தில் குறைந்தது 10 இடங்கள்; பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதிநிதிகள் இருக்கும் வகையில், இடங்கள் ஒதுக்கீடு என்றெல்லாம் பா.ஜ.க. உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க.வின் இரு ஒருங்கிணைப்பாளர்களிடம் வற்புறுத்தியதாகவும், அதற்கு 25 இடங்கள்தான் தங்களால் முடியும் என்று கூறி, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவேண்டிய இடங்கள் முடிவான பிறகு, பார்க்கலாம் என்று கைபிசைந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

பா.ஜ.க. எவ்வளவு அதிகமான இடங்களை அ.தி.மு.க.விடமிருந்து பெறுகிறதோ - அது - தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவைப் பொறுத்தவரையில் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக்கும் கிடைக்கவிருக்கும் தொடக்க கால உறுதி செய்யப்பட்ட வெற்றி இடங்களாகும்! எனவே, தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. ஒதுக்கும் இடங்கள்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையே இல்லை. தி.மு.க. கூட்டணியை எதிர்த்து, என்ன சாதனை செய்தார்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்று கேட்டார், மாண்புமிகு அமித்ஷா.

அதற்கு ஏராளமான பட்டியல் போட்ட பதில் அணிவகுக்க எப்போதும் ஆயத்தமாக உள்ளது. பொய் நெல்லைக் குத்தி பொங்கலிட- இந்த எலி- தவளைக் கூட்டணியால் ஒருபோதும் முடியாது என்பதை நாடாளுமன்ற 2019 தேர்தல் முடிவுகள் நிரூபித்ததைப்போலவே, 2021 சட்டமன்றத் தேர்தலும் உலகுக்குக் காட்டுவது உறுதி.

“சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ - நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்” - பா.ஜ.கவை தாக்கிய கி.வீரமணி!

2ஜி ஊழல் - உண்மை நிலை என்ன?

ஊழல், குடும்ப அரசியல் என்று கூறுகிறார்கள்; 2ஜி ஊழல் என்று கூறி, உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நடந்த விசாரணை முடிவு உலகறிந்ததாயிற்றே! அதன்மீதுதானே இப்போது மேல்முறையீடு மத்திய அரசு செய்துள்ளது. பா.ஜ.க. வைத்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே - வழக்கு அப்பீல் நடைபெறுவதால், அதுபற்றி மேலும் எழுதுவது முறையல்ல.

பா.ஜ.க. ஆட்சியில் எவரும் ஊழல் செய்து தண்டிக்கப்பட்டு சிறைச்சாலைக்குப் போகவில்லையா? பா.ஜ.க. கட்சித் தலைவர்கள்மீது லஞ்ச வழக்கு இல்லையா? (பங்காரு லட்சுமணன் நினைவு இருக்கிறதா) சுடுகாட்டு சவப்பெட்டி ஊழல் மறந்துவிட்டதா? என்ரான் ஊழல் மறந்து போய் விட்டதா? என்று எதிர்க்கேள்விகள் எழும்பாமலா இருக்கும்? சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கின்ற பாதக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டு எவ்வகையில் நியாயம்? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் எத்தனை! எத்தனை!!

மத்தியில் 27 சதவிகிதம் வேலை வாய்ப்பில் கொடுத்ததற்காக சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியை 10 மாதங்களில் கவிழ்த்த - மண்டலுக்கு எதிராக கமண்டலத்தைத் தூக்கிய காவிகள் என்பது தமிழக வாக்காளர்கள் அறியாததா? மத்தியில் காங்கிரஸ்தானே (நரசிம்மராவ்) 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு? மறுக்க முடியுமா? தி.மு.க. - காங்கிரஸ் மத்தியில் இருந்தபோது வந்த மற்றொரு சாதனை 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - சமூகநீதிக்கு மற்றொரு மைல்கல் அல்லவா?

மத்திய கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் நிறைவேற்றம். 2006 இல் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வரலாற்று முக்கியமான சாதனைகள் அல்லவா!

மத்திய அரசின் தமிழ் மொழி ‘‘செம்மொழி பிரகடனம்‘’ தி.மு.க.வின், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வரலாற்றுச் சாதனை - அதனை காணாமற்போக அனுதினமும் முயற்சிப்பது இப்போதுள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியும், அதற்குத் துணை போகும் அ.தி.மு.க. ஆட்சியும்தானே! குடும்ப அரசியல் என்றார் அமித்ஷா - அந்தக் குற்றச்சாட்டைக் கூற பா.ஜ.க.வுக்கு தார்மீக உரிமை உண்டா?

இதோ இந்தியப் பட்டியலைப் பாருங்கள்:

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ்சிங் எம்.பி., வசுந்தரராஜேசிந்தியா மகன் துஷ்யந்த்சிந்தியா எம்.பி., ராமன்சிங் மகன் அபிஷேக்சிங் எம்.பி., பிரேம்குமார் சமானி மகன் அனுராக்தாகூர் எம்.பி., கோபிநாத் முண்டே மகள் பங்கஜ் முண்டே எம்.பி., யஸ்வந்த்சின்கா மகன் ஜெயந்த்சின்கா எம்.பி., பிரமோத்மகாஜன் மகள் பூனம் மகாஜன் எம்.பி., கல்யாண்சிங் மகன் ராஜ்பீர்சிங் எம்.பி., தேவேந்திரபிரதாபன் மகன் தர்மேந்திரபிரதாபன் எம்.பி., எடியூரப்பா மகன் ராகவேந்திரா எம்.பி., பி.கோயல் மகன் பியூஸ் கோயல் அமைச்சர், மேனகா மகன் வருண் காந்தி, லால் கோயல் மகன் விஜய் கோயல், ஆ.வைத்யநாத் மகன் ஆதித்யநாத், உ.பி. முதல்வர்.

(‘முரசொலி’, 23.11.2020)

எனவே, வடநாட்டில் செய்த பல வித்தைகள் - பீகார் தந்திரங்கள் - தமிழ்நாட்டில் போணியாகாது; இது பெரியார் மண் - சமூகநீதிக் களம். 100 ஆண்டு வரலாறு தாண்டிய திராவிடர் இயக்க மண். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அண்ணாவின் - கலைஞரின் அரசியல் அடித்தளத்தினால் கட்டப்பட்ட உணர்வுகளின் எஃகு கோட்டை!

ஒரே ஆண்டில் முப்பெரும் சாதனைகளைச் செய்த அண்ணா போதித்த அரசியல் பாடம் - மணல் மேடு அல்ல.

1. சுயமரியாதைத் திருமணச் சட்டம் (பிறகு உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட சட்டம்).

2. தாய் மண்ணுக்கு - ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம்

3. இருமொழித் திட்டம் (தமிழ், ஆங்கிலம்)

- இவை தாண்டிய சமூகநீதிக் கொடி - இவற்றை சகிக்காதுதானே காவிகள் திட்டமிட்டு விபீடணர்களை விலைக்கு வாங்கிட பா.ஜ.க. ஊடுருவலுக்கு ‘பாயிரம்‘ பாடி பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றுவார்களாம் - வீண்கனவு காண்கிறார்கள்!

மின்மினிகள் மின்சாரத்தோடு போட்டியிட்டு வெற்றி அடைய முடியாது! ‘வித்தைகள்’ கண்டு ஏமாறாது பெரியார் மண்!

சொந்தக் கால் இல்லாத ‘மிஸ்டு கால்கள்’ - நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம். கூட்டுச் சேர்ந்தால் - வெற்றி கானல் நீரே - ஒருபோதும் கனவு நனவாகாது! தமிழ்நாடு ஒருபோதும் ‘‘வித்தைகளால்’’ ஏமாறாது!

banner

Related Stories

Related Stories