அரசியல்

தமிழக மக்களின் வெறுப்புக்குள்ளான பாஜக, மாநில வளர்ச்சியை விமர்சிப்பதா? - நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் வெறுப்புக்குள்ளான பாஜக, மாநில வளர்ச்சியை விமர்சிப்பதா? - நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்குத்தான் உரிமை உள்ளது. பா.ஜ.க தலைவர் நட்டாவுக்கு யார் அதிகாரம் அளித்தது என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பா.ஜ.க அரசின் மக்கள் விரோத சட்டங்கள், நடவடிக்கைகள், திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:

“தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து ஆதாரத்துடன் கூறாமல் குற்றச்சாட்டை பொத்தாம்பொதுவாக சுமத்தியிருக்கிறார். கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதால்தான் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளிப்பான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே பா.ஜ.க. செல்வாக்கு இழந்த முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதைச் சகித்துக் கொள்ள முடியாத ஜே.பி.நட்டா, ஆத்திரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். தமிழகம் மிக நீண்ட பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பெற்றிருப்பதாக மேலும் கூறியிருக்கிறார். எவற்றையெல்லாம் பா.ஜ.க. பறித்து வருகிறதோ, அவற்றின் பெருமைகளை குறித்து பேசுவதற்கு பா.ஜ.க. தலைவருக்கு என்ன உரிமை இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் தமிழக மக்களை பாதிக்கிற திட்டங்களை தொடர்ந்து திணித்து வருகிறது. தமிழகத்தின் தனித்தன்மையையும், அடையாளத்தையும் அழித்து வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் 2 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்று பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்திலுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழக மக்களின் வெறுப்புக்குள்ளான பாஜக, மாநில வளர்ச்சியை விமர்சிப்பதா? - நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

நீட் தேர்வுக்காக தமிழக அரசு நடத்தவேண்டிய பயிற்சி வகுப்புகள் நடப்பாண்டில் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வு நடத்துவது தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கி போகிற நிலையை ஏற்படுத்துவதாகும். இதற்கு நீட் தேர்வை திணிக்கிற பா.ஜ.க. அரசும், அதைத் தடுக்கத் தவறிய அ.தி.மு.க. அரசும் தான் காரணமாகும்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு இங்கேயிருக்கின்ற எதிர்க்கட்சிகள் தடையாக இருப்பதாக ஜே.பி. நட்டா கூறுகிறார். வளர்ச்சிக்கு யார் தடையாக இருக்கிறார்கள்? சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை - 2020 ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிடப்பட்ட நிலையில் அதை தமிழில் வெளியிட வேண்டும் என்பதற்குக் கூட, நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற வேண்டியிருக்கிறது.

சூழலியல் அறிக்கை குறித்து கருத்துக் கேட்பதற்கு அதைத் தமிழில் வெளியிட வேண்டும் என்கிற குறைந்தபட்ச நியாயமான அணுகுமுறை கூட பா.ஜ.க. அரசிடம் இல்லை. மக்களின் கருத்தைக் கேட்காமல் கொரோனா காலத்தில் அவசர, அவசரமாக அதை சட்டமாக நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. இதன் மூலம் இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது தான் பா.ஜ.க. வின் நோக்கமாகும்.

அதேபோல, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அவசரகதியில் தொழிலாளர்கள் சட்டதிருத்தங்கள், பொதுத்துறை பங்குகள் விற்பனை, ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் இணைப்பு நடவடிக்கைகள், மின்சார உற்பத்தியில் தனியார் மயம், துறைமுகங்கள், விமான நிலையங்கள் அம்பானி, அதானிகளுக்கு தாரை வார்ப்பு என தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு எடுத்து வருகிறது.

தமிழக மக்களின் வெறுப்புக்குள்ளான பாஜக, மாநில வளர்ச்சியை விமர்சிப்பதா? - நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உரிய விலை வழங்கப்படவில்லை. ஒரு குவிண்டால் கரும்பு விலை ரூபாய் 275 ஆக இருந்ததை ரூபாய் 10 உயர்த்தி குறைந்தபட்ச ஆதரவு விலையாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. அதேபோல, கொப்பரை தேங்காய்க்கு ஒரு கிலோவிற்கு ரூபாய் 99.60 வழங்கியுள்ளது. இதை கிலோவிற்கு 120 ரூபாயாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கத் தயாரில்லை.

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் முன்னணி பங்கு வகித்து வந்தது. ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடிக்கு வர்த்தக ஏற்றுமதி நடைபெற்ற திருப்பூரில் தற்போது அதில் 50 சதவிகிதம் கூட ஏற்றுமதி செய்ய முடியாத நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்திலோ அல்லது அனைத்து எதிர்கட்சிகளை காணொலி காட்சி மூலமாக பங்கேற்க வைத்து விவாதம் நடத்தாமல் ஒரு தலைபட்சமாக நடைமுறைக்கு கொண்டு வருகிற முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கிராமப்புற மாணவர்கள் புறக்கணிப்பு, கல்வியை தனியார் மயமாக்கி வணிகமயமாக்கும் நோக்கத்தை கொண்டு புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையத்தை அமைத்து கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசில் இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து ஒற்றைக் கலாச்சாரத்தைப் புகுத்தி அதன் மூலம் 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை நடைமுறைப் படுத்தி வருகிறது. புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் அறிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு எந்த பங்கும் இல்லை.

பொதுப்பட்டியலிலுள்ள கல்வி குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. கல்வியைப் பொறுத்தவரையில், பெரும்பங்கு நடைமுறைப் படுத்துவது மாநில அரசுகள்தான். அதை புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறித்திருக்கிறது. இதை எதிர்க்கிற துணிவு தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு இல்லை.

எனவே, தமிழக மக்களால் வெறுக்கப்படுகிற கட்சியாக பா.ஜ.க. இருக்கும் நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை, மத்திய, மாநில அரசுகள் தான் செய்யமுடியும்.

அதில் குறைகள் இருந்தால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யலாம். ஆனால், தமிழக எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சியை தடுப்பதாகக் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத அர்த்தமற்ற வாதமாகும். இத்தகைய வாதத்தை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிற முயற்சியில் ஈடுபட்டுகிற பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை வன்மையாக கண்டிக்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories